கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியுதவி… மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

அரசியல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, நந்தனத்திலுள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “கலைஞர் ஆட்சி காலத்தில் 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம்.

22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமர் மோடிக்கும் – மத்திய அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிகளை விரைந்து இந்த இரண்டாவது கட்டத்திற்கு செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின்  தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “மத்திய அமைச்சர் மனோகர்லாலை சந்தித்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

எனது கோரிக்கையை ஏற்று 118.9 கி.மீ விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அதை விரைவாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் விளக்கினோம்.

மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசின் ஆதரவையும் கோரினேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐந்து மாவட்டங்களில் கனமழை… வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *