மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற 16-ஆவது நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார்.
நான்கு நாட்கள் பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆவது நிதிக்குழு நேற்று (நவம்பர் 17) சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வரவேற்றார்.
இந்தநிலையில், நிதிக்கமிஷன் உறுப்பினர்களுடன் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “மத்திய அரசுக்கும் பல்வேறு மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கனவே வரையறுத்து தந்துள்ளது.
அத்தகைய வழிகாட்டுதலின் படி நாம் கடைபிடித்து வரும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தமது மாநிலங்களின் உரிய தேவையை நிறைவேற்றுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன.
எனினும், சுகாதாரம், கல்வி சமூக நலன் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள் தான் நிறைவேற்றி வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்ற தேவையான வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.
அந்தவகையில், கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் பாராட்டுகிறோம்.
எனினும் இந்த பரிந்துரைக்கு மாறாக கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு இக்காலகட்டத்தில் பெருமளவில் உயர்த்தியதே இதற்கு காரணம். அதுமட்டுமின்றி மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து குறைந்து வருவது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதிநிலையை தொடர்ந்து பாதிக்கிறது.
ஒருபுறம் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மறுபுறம் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
எனவே மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வின் பங்கு 50% உயர்த்தப்படுவது தான் முறையானதாகவும் அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும். இவ்வாறு 50% பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளர்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலேண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட முடியும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘கங்குவா’
ஜவுளித் துறையில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பெருமிதம்!