செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 17) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ல் வலியுறுத்தியவாறு,
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் 2023-24ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில்,
சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்.
அதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, Youtube மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
சட்ட நடவடிக்கைக்கு தயார்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்!
சஞ்சு சாம்சன் – ஹெட்மேயர் அதிரடி: குஜராத்தை பறக்கவிட்ட ராஜஸ்தான்