mk stalin tribute to muthuramaliga devar

பசும்பொன்னில் ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்தநாள் விழா மற்றும் 61வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவை போற்றக்கூடிய வகையில் இன்று அவருக்கு வணக்கத்தைச் செலுத்தியிருக்கிறோம்.

2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி.

அப்போது தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து தந்ததும், தேவர் இல்லத்தை 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததும், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூற்றாண்டு விழா வளைவு அமைத்ததும்,

9 லட்சம் ரூபாய் செலவில் புகைப்பட கண்காட்சி அமைத்துக் கொடுத்ததும், 4 லட்சம் ரூபாயில் நூலகம், 5 லட்சம் ரூபாயில் முடியிறக்கும் இடம், 5 லட்சம் ரூபாயில் முளைப்பாரி மண்டபம் என இவை அனைத்தையும் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அமைத்து கொடுத்தார்.

தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் செலவில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தார். மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்க தேவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக 1.50 கோடி செலவில் 2 நிரந்தர மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வீரராக பிறந்தார். வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார். அவருடைய மறைவிற்கு பிறகும் இப்போது வீரராக போற்றப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆரியம் திராவிடம் குறித்து ஆளுநர் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

“இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை தயவு செய்து ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

“ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகைக்கு முன்பு உள்ள சாலையில் தான் வீசப்பட்டுள்ளது.

எனவே ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு இந்த பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் இன்றைக்கு பாஜக கட்சி தலைவராக மாறியுள்ளார்.

ஆளுநர் மாளிகையும் பாஜகவின் அலுவலகமாக மாறியுள்ளது என்பது தான் வெட்க கேடானது” என்று பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

லியோ வெற்றிவிழா: நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!

கார்த்தி 25: திரைபிரபலங்களின் முழுப்பேச்சு தொகுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *