ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிவிட்டது.
திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைத் திணறவைக்கும் அளவுக்கு, எடப்பாடி பழனிச்சாமி, சீமான் ஆகியோரின் பிரச்சாரம் நேற்று உச்சகட்டத்தை எட்டியது.
தேர்தல் பிரச்சாரம் இன்று பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 5.00 மணியுடன் நிறைவுபெறுகிறது.
ஆளும் தி.மு.க. அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாள்களாக மூத்த அமைச்சர்களும் கொங்கு பகுதி அமைச்சர்களும் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்டுவருகிறார்கள்.
நேற்றும் இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று மட்டும் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு, சம்பத் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
முன்னதாக, பிரச்சாரத்துக்காக நேற்று சென்னையிலிருந்து விமானத்தில் கோவைக்கு வந்த ஸ்டாலின், நேராக ஈரோடு வந்து சக்தி சுகர் மில் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குவதாகத் திட்டமிடப்பட்டது.
அதாவது இரவு உணவுக்கு ஈரோட்டுக்கு வந்துவிடுவார் என்றும் அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கோவையிலிருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு முதல்வர் ஈரோட்டுக்கு வந்தார்.
திடீர் மாற்றத்துக்குக் காரணம், நேற்று நடைபெற்ற எடப்பாடி, சீமான் பிரச்சாரக் கூட்டங்கள்தான்! இதை முக்கிய நிர்வாகிகளும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.
பிரச்சாரக் கெடு தேதிக்கு முந்தைய நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரம் உச்சகட்டத்துக்குச் சென்றது.
நேற்று மாலையில் வ.உ.சி. பூங்காவில் தன் பிரச்சாரத்தைத் தொடங்கிய சீமான், அப்படியே சேலம் சாலையில் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அவரின் பிரச்சாரத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும்படி ஆகிவிட்டது.
சீமானின் பிரச்சாரம் இப்படி என்றால், எதிர்ப்பக்கம் பன்னீர்செல்வம் பூங்காவில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் தங்குமிடத்துக்கு அருகிலுள்ள பெரியார் ஆர்ச் பகுதியில் நேற்றைய கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
சீமானின் பிரச்சாரத்தில் உள்ளூர்க்காரர்களின் கூட்டம் குறைவாக இருந்தாலும், வெளியூரிலிருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்து திரண்டனர். எடப்பாடியின் கூட்டத்தில் நேற்று அதிகமான அளவில் அதிமுக நிர்வாகிகள் உள்ளூர்க்காரர்களைத் திரட்டியிருந்தனர்.
திடீரென வந்த இந்தக் கூட்டத்தை காவல்துறையினர் எதிர்பார்க்காத நிலையில், அவர்களின் மத்தியில் கடுமையான டென்ஷன் ஏற்பட்டது. வழக்கமான தேர்தல் கூட்டம்தான் இது என்றாலும், முதல்வர் வருகை அவர்களின் பதற்றத்தை அதிகரித்திருந்ததைப் பார்க்கமுடிந்தது.
வேறு வழியே இல்லை; இரவு 10 மணிக்கு பிரச்சாரம் முடியும்வரை காத்திருந்தால்தான், முதல்வரின் வாகனப் போக்குவரத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இருக்கும் என காவல்துறை அதிகாரிகள் மேலிடத்துக்குத் தெரிவித்தனர். போக்குவரத்து ஜாம் ஆனது மட்டுமல்ல, இருவரின் பிரச்சாரத்திலும் அதிக கூட்டம் திரண்டநிலையில், முதலமைச்சர் வரும் நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாகும் நிலைமை ஏற்பட்டது.
ஏற்கெனவே, திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் உண்டானதும், முதல்வர் வருகையின்போது தகராறு செய்தால் என்ன ஆகும் என்கிறபடி சீமான் பேசியதும் காவல்துறை தரப்பில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. என்னதான் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், கூட்டத்தில் யாரோ ஒருவர் சிறு கல்லை எறிந்துவிட்டாலும் என்ன செய்ய… பெருந்திரளான மக்கள் கூடும்போது அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதே என பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்தபடி இருந்தனர்.
காவல்துறையில் மட்டுமல்ல சீமானின் பிரச்சாரம் காரணமாக, ஸ்டாலின்வரை டென்ஷனும் முன்னெச்சரிக்கை உணர்வும் வெளிப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான், இன்று பிற்பகல் 2 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, மாலையில் சீமான் பிரச்சாரம் இருக்கும்நிலையில், காலையிலேயே சம்பத்நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மாலை 3.30 மணிக்கு முதலமைச்சரின் பிரச்சாரம் முடிவடைகிறது.
வணங்காமுடி
மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை : பிரச்சாரத்தில் முதல்வர் கொடுத்த அப்டேட்!