திமுகவில் திடீர் அதிசயம்: பாயும் பணம்!  இதோ பட்டியல்!

அரசியல்

அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் என்று திமுக நிர்வாகிகள் பாடல் பாடாத குறையாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

’திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களா?  பொய் சொல்லாதீர்கள்’ என்று திமுகவினரே உடனடியாக பதில் கேள்வி எழுப்புவார்கள். முதலில் இதை முழுமையாக படியுங்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததில்  இருந்தே அக்கட்சி நிர்வாகிகள், ’வெளிய சிரிக்கிறேன் உள்ள அழுகுறேன்… நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்’ என்பது மாதிரித்தான் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

”முந்தைய அதிமுக ஆட்சியில் அதன் கடை நிலை நிர்வாகிகள் வரைக்கும் கரன்சி வெள்ளம் பாய்ந்தது. அதன் காரணமாகத்தான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் எடப்பாடியை சுற்றி எறும்புகளாக நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது. ஆனால் திமுக ஆட்சியில் நிலைமையே வேறு” என்று திமுக மாசெக்களே  பஞ்சப் பாட்டு பாடி வந்தார்கள்.

உள்ளபடியே கிளைச் செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அவரவர்  அந்தஸ்துக்கேற்ப  இதுதான் நிலைமை. ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனபோதும் கூட இத்தனை காலமாக உழைத்த தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை ஓப்பனாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர் திமுக நிர்வாகிகள்.

‘தேர்தலுக்காக வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கூட  கட்ட முடியலை’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள். 

இதை திமுக தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினும் அறியாமல் இல்லை. அவ்வப்போது, ‘தொண்டர்களை கவனிக்க வேண்டும், கட்சிக்கார்கள் இல்லாமல் நாம் இல்லை’ என்றெல்லாம் அவர் மடல்கள் வரைந்தாலும் அமைச்சர்களுக்கு அறிவுரைகள் கூறினாலும்  நிலைமை இப்படியேதான் நீடித்தது.

இந்த நிலையில்தான் திமுக வரலாற்றில் முதல் முறையாக அதிரடியான ஓர் இன்ப அதிர்ச்சியை நிர்வாகிகளுக்கு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

MK Stalin sweet surprise cash gift to party men

முதன் முதலில் உட்கட்சித் தேர்தல் மூலம் தான் தலைவராக பதவியேற்க இருக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஸ்டாலின் ஒரு திட்டத்தை ரகசியமாக  நடைமுறைப் படுத்தியிருக்கிறார்.

அதன்படி ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்த ஓரிரு நாட்களாக அமைச்சர்கள் மூலமாக நிர்வாகிகளுக்கு பணப் பாசனம் நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கு எல்லாம் தலா 2 லட்ச ரூபாய், எம்.எல்.ஏ.க்களுக்கு 5 லட்ச ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டச் செயலாளர்களுக்கு அதாவது அமைச்சர் பதவியில் இல்லாத மாவட்டச் செயலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய சலவை ரூபாய் நோட்டுகளாக நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.  

அமைச்சர்கள் மூலமாக இந்த பணம் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது சில அமைச்சர்கள், ‘இந்தா வச்சிக்க…’ என்று தானே கொடுப்பது போல சொல்ல, ‘நீங்களா கொடுக்கிறீங்க? தலைமைதானே அண்ணே கொடுக்குது’ என்று உதட்டுக்குள் சொல்லிக் கொண்டு வாங்கி வந்திருக்கிறார்கள் சில விவரமான நிர்வாகிகள்.

அப்படியென்றால் கடை நிலையில் இருக்கும் கிளைச் செயலாளர்களுக்கு? அவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் இந்த மாதம் முதல் வழங்கப்பட இருக்கிறது.

முதல்வர் குடும்ப வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது, “ இது ஏதோ அதிமுகவில் பொதுக்குழுவுக்காக வழங்கப்பட்டதே அதுபோல அல்ல. திமுக தலைவராக தான் பதவியேற்கும்போது கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் கட்சியினர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணர்ந்துதான் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க தலைமையே கொடுக்கும் பணம்.

கிளைச் செயலாளர்களுக்கு மாதம் ஒரு தடவை  மற்ற நிர்வாகிகளுக்கு  வருடத்துக்கு மூன்று முறை இது தொடர இருக்கிறது” என்கிறார்கள்.

திமுகவினர் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள். 

வேந்தன்

தலைவர் பதவி: வேட்பு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின்!

போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் அபேஸ்!

+1
2
+1
8
+1
2
+1
11
+1
0
+1
8
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *