இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 2) நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் இசையமைத்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார்.
முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளி படம் முதல் சுமார் 50 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இளையராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா அலுவலகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து, அறிஞர் அண்ணாவின் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பொன்முடி ஆகியோரும் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்திலும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
“இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்”: கமல்
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்: ஹாக்கியில் புதிய சாதனை!