கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 15) காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை 12ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டார். பின்னர் காய்ச்சலும் உடல் சோர்வாக இருப்பதையும் உணர்ந்த முதல்வர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார்.
அதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்திருந்த அவர் அனைவரும் கவனமாகவும், முகக் கவசம் அணிந்து முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முதலில் வீட்டுத் தனிமையிலிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி அதிகமாக இருப்பது போல் உணர்ந்ததையடுத்து நுரையீரலில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார். சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என ரிசல்ட் வந்துள்ளது. காது, மூக்கு, தொண்டைக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் மோகன் காமேஷ்வரன் சிகிச்சை அளித்து வருகிறார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் இயல்பாகவே இருக்கிறார். வழக்கமாக அவர் எடுத்துக்கொள்ளும் இட்லி, சூப் உள்ளிட்ட உணவையே இன்றும் அருந்தினார். அதோடு அரசு சார்ந்த விஷயங்களையும் கவனித்து வருகிறார். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மருத்துவமனையிலிருந்தபடியே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காமராஜர் பிறந்தநாள், தகைசால்தமிழர் சங்கரய்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மரியாதை தெரிவிப்பது என சமூக வலைதளத்திலும் ஆக்டிவாகவே உள்ளார்.
இந்தசூழலில் மீண்டும் இன்று முதல்வருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இயல்பாகவே இருக்கிறார் என்று முடிவு வந்தது. அதன்படி இன்றோ நாளையோ டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். பகல் 12.30 மணியளவில் முதல்வரின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை, “முதல்வருக்கு கொரோனா சிகிச்சை வழிமுறைகள் படி மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து வருகிறார். உடல்நலம் நன்றாகவே உள்ளது. மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்ட போதே முதல்வர் ஸ்டாலினுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பெரிய பாதிப்பு இல்லாமல் லேசான காய்ச்சல், சளியுடன் சரியாகிவிட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரியா