mk stalin speech in kalaignar centernary function

நாடாளுமன்ற தொகுதியை குறைக்க சதிச்செயல்: முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நேற்று (அக்டோபர் 6) கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தொகுத்துள்ள “தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூலை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “கலைஞருக்கு தாய்வீடு – இது மிகமிக பொருத்தமான தலைப்பு. கலைஞருக்கு மட்டுமல்ல; எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு.

என்னைப் பொறுத்தவரையில், தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல! உயிரும் உணர்வும் இணைந்து உடல் இயங்குவது போலத்தான் நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகப் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்தும் முழுத் தகுதியும் கடமையும் திராவிடர் கழகத்துக்கு உண்டு.

உலகில் எந்த இரண்டு இயக்கங்களுக்குள்ளும் இத்தகைய நட்பும் – உறவும் இருந்திருக்க முடியாது. முரண்பட்டு மோதல் நடத்திய காலங்கள் உண்டு. தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்ல, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவைகளாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும்.

அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும் – அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை. அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

இது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.

தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூகநீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள். மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி  நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையானது கூட வேண்டுமே தவிர குறையக் கூடாது.

அதே போல் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பா.ஜ.க. முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது.

தமிழ் மொழி காக்க, தமிழினம் காக்க, தமிழ்நாட்டைக் காக்க, இந்தியா முழுமைக்கும் சமதர்ம, சமத்துவ, சகோதரத்துவ, சமூகநீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன் என்பதுதான் எனக்கு திராவிடர் கழகம் நடத்தி இருக்கும் இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.

ஏதோ சாதித்துவிட்டான்,  நினைத்ததை முடித்துவிட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல. இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகச் சரியாக, முறையாகப் பயன்படுத்துவேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மோனிஷா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லோகேஷ் கனகராஜ் தடை செய்யப்பட வேண்டும்..! கொந்தளித்த கார்ட்டூனிஸ்ட்..!

அடுத்த படமும் “அயலான்” இயக்குநருடன் தான்: சிவா கொடுத்த அப்டேட்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

1 thought on “நாடாளுமன்ற தொகுதியை குறைக்க சதிச்செயல்: முதல்வர் ஸ்டாலின்

  1. முதல்வரின் மனைவி மட்டும் சனாதனி ஆக இருப்பதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *