கிண்டி பன்னோக்கு மருத்துவமனை 15 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை எய்ம்ஸுக்கு 2வது செங்கல் கூட இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன ஆராய்ச்சி வளாகத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “2015 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு வரை 2வது செங்கல்லை கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கின்ற நிலையில் அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் கட்டி முடித்துள்ளோம். நம்மால் இதுபோன்று ஆண்டுக்கு ஒரு மருத்துவமனையைக் கட்ட முடியும்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தோடு திட்டங்கள் தீட்டப்படுவதும், மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிக்கக் கூடியதற்கும் வேறுபாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் வெளியீடு 1975 ஜனவரி 12 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அதனை அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது வெளியிடுவதாகவும் நூலை பெற்று கொள்வதாக அப்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த கே.கே.ஷாவும் ஒப்புக்கொண்டனர்.
கடைசி நேரத்தில் இப்போது நடந்திருப்பதை போலவே அப்போதும் குடியரசுத் தலைவரை வரவிடாமல் தடுத்து விட்டனர்.
மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. ”medical city” என்று தான் சென்னைக்கு பெயர். கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு உதவி திட்டம் ஆகியவற்றை தொடங்கியவர் கலைஞர் தான்.
2005 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட “அம்மா குழந்தை நல பெட்டகம்”, “அம்மா கர்ப்பிணி தாய்மார்கள் நலத் திட்டம்” ஆகியவற்றை எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் செயல்படுத்தி வருகிறோம்.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற சிந்தனையை விதைத்தவர் கலைஞர் தான். மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 போன்ற நாட்டிற்கே பல முன்மாதிரியான மருத்துவ திட்டங்களை வகுத்து செயல்படக்கூடிய திறன் உலகம் முழுவதும் உள்ள சுகாதார ஆர்வலர்களை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு வருமுன் காப்போம் முகாம்கள் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 1,502 முகாம்கள் நடத்தப்பட்டு 14,79,732 பேர் பயனடைந்திருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் சேவையை கலைஞர் தான் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடியே 44 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். இப்படி மக்கள் நல அரசாக மக்களை காக்கும் அரசாக கலைஞர் வழியில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைஞர் சோதனைகளை சாதனைகளாக மாற்றினார். அவர் வழியில் நாங்களும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்.
தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகளை செய்ய நினைக்கும் போதெல்லாம் அதற்கு ஒரு இடையூற்றை ஏற்படுத்தி நம்மை திசை திருப்பி தடுக்க பார்ப்பார்கள். ஆனால் திசை திரும்ப மாட்டோம். மக்கள் நலம் ஒன்றே இலக்கு என நேர்வழியில் பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மோடியிடம் இருந்து தப்பிக்க முடியாது: ஸ்டாலினுக்கு வானதி எச்சரிக்கை!
தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்? அதிர்ச்சிப் பின்னணி!