திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய மு.க.ஸ்டாலின், “இது பேரறிஞர் அண்ணா அமர்ந்த இடம், கலைஞர் கோலோச்சிய இடம். நான் அண்ணா அல்ல, கலைஞர் அல்ல.
அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற கலைஞரால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டு பெற்ற காரணத்தால் கிடைத்த பொறுப்பு என்ற தன்னடக்கத்தோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் கடந்த 70 ஆண்டுகாலமாக ஏற்றத்தோடு, மலர்ச்சியோடு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது திமுக.
இந்நிலையில் இரண்டாவது முறையாக என்னை தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பளித்த அனைவரையும் வணங்குகிறேன்.
பேரறிஞர் அண்ணா நம்மை விட்டு சென்ற போது கழகத்தை காத்தவர் கலைஞர். அவரும் நம்மை விட்டு சென்ற போது இந்த எளியன் தலைமையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, சொந்த விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்திய ஸ்டாலின், “இனி திமுகதான் தமிழகத்தை ஆளப்போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கழகத்தின் செல்வாக்கு மக்களிடையே அதிகமாக இருக்கிறது. இதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது.
கழகத்தின் செல்வாக்கும், என் மீதான நம்பிக்கையும் மக்களிடையே உயர உயர மக்களிடம் பெற்றிருக்க கூடிய நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என குறிப்பிட்டார்.
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின் , “எது வந்தாலும் பொறுப்பேற்கக் கூடியது மன்னன் தான். மழை பெய்யவில்லை என்றாலும், அதிகமாக மழை பெய்தாலும் என்னைதான் குறை சொல்வார்கள்.
ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் முதல்வர். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல் இருக்கிறது என்னுடைய நிலைமை.
இப்படிப்பட்ட சூழலில் மேலும் துன்பப்படுத்துவது போல, கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது, யாரிடம் சொல்வது.
நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் புதிய பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்.
இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறது. என்னுடைய உடம்பை பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.
உங்களுடைய செயல்பாடுகள் கழகத்துக்கு பெருமைபடுத்தக் கூடிய வகையில் அமைய வேண்டுமே தவிர சிறுமைபடுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது.
பொதுநன்மைக்காக இதை நான் சொல்லவில்லை. உங்களுடைய நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன்.
பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட விதத்தின் காரணமாக கழகம் பழிகளுக்கும், ஏளனத்துக்கும் ஆளானது.
இன்று நமது வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையைத் தவிர அனைத்தும் பொது இடமாக ஆகிவிட்டது. பிரைவேட் ப்ளேஸ் என்று எதுவும் இல்லை.
மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும்.
நாம் பயன்படுத்தக் கூடிய சொற்கள் மிக மிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். எனவே பொதுமேடைகள் மட்டுமல்ல , அடுத்தவர்களிடம் பேசும் போது கூட மிக எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.
நீங்கள் சொன்னதை வெட்டியும், ஒட்டியும் பரப்பிவிடுவார்கள். இதற்கு பதில் சொல்லவே நமக்கு நேரம் சரியாகிவிடும்.
பிறகு எப்படி மக்கள் பணியை பார்க்க முடியும். இப்படி நம்முடைய கவனத்தை திசை திருப்புவதே எதிரிகளின் ஒரே நோக்கம்.
நாம் செய்து வரும் சாதனைகளில் குறைகளை கண்டுபிடிக்க முடியாதவர்கள், மக்கள் நல திட்டங்களை பார்த்து மலைத்து கிடப்பவர்கள் கொச்சைப்படுத்துவதன் மூலம் குளிர் காயப்பார்ப்பார்கள். இதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது” என்று அறிவுறுத்தினார்.
கூட்டம் சேர்ப்பது முக்கியமல்ல
மேலும் அவர், “எத்தனையோ இரவு பகலாக திட்டமிட்டு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம். பல்லாயிரம் கோடி செலவு செய்கிறோம். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் சீராக இருந்திருக்குமேயானால் இன்னும் பலநூறு திட்டங்களை தீட்டியிருப்போம் .
உதயநிதியின் முன்னெடுப்பை பெருமையோடு சொன்னார்கள். தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பாசறை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஊர் ஊராக நடக்கிற அந்த பட்டியலை முரசொலியில் பார்க்கும் போது எனக்கு மிக மிக மன நிறைவாக இருக்கிறது.
இத்தகைய பாசறை கூட்டங்களின் மூலமாக கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டும். கட்சிக்கு கூட்டம் சேர்ப்பது முக்கியமல்ல. கொள்கை கூட்டமாக இருக்க வேண்டும்.
அதற்கு பாசறை கூட்டம் பயன்பட வேண்டும். இந்த கூட்டங்களுக்கு இளைஞர்களை அழைத்து வாருங்கள். ஒவ்வொரு இளைஞர்களிடமும் தனி தனியாக உரையாற்றி நம்முடைய கொள்கையை எடுத்துரைக்க வேண்டும்.
பாசறை கூட்டத்தை பிரம்மாண்டமாகத்தான் நடத்த வேண்டுமா?. தெருமுனை கூட்டமாகவும், திண்ணை பிரச்சாரமாகவும் மேற்கொள்ளுங்கள். வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் ஒவ்வொரு தனி மனிதரிடமும் பரப்புரை செய்யுங்கள்.
கழக அரசு செய்யக் கூடிய சாதனைகளை, கழகத்தின் மீது வன்மத்தோடு பரபரப்பக் கூடிய அவதூறுகளுக்கான பதிலடியை வீடியோக்கள், படங்கள் மூலமாக கொண்டு சேருங்கள்” என்று அறிவுறுத்தினார்.
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரி தமிழகம் உட்பட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்.
அடுத்து நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் 100 சதவிகிதம் வெற்றி பெற இதுதான் நமக்கு அடித்தளமாக அமையும்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலையும் செய்வார்கள். தங்களுடைய சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், நம்மை பற்றி அவதூறு பேசி அரசியல் நடத்த பார்க்கிறது பாஜக.
மதத்தை, ஆன்மீக உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்த பார்க்கிறது. ஆன்மீகத்தையும், அரசியலையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழக மக்கள் என்பதால் பாஜக இங்கு மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாஜக குளிர் காய்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கலகலத்து கிடக்கிறது. உறுதியான தலைமை இல்லாததால் 4 பிரிவுகளாக சரிந்து கிடக்கிறது.
பூத் கமிட்டி
திமுகவை எதிர்ப்பதை தவிர அவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும், வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டுமே வெல்லும், அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது திமுக.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே பூத் கமிட்டி அமையுங்கள். அடுத்த இரு மாதத்துக்குள் இந்த பணிகளை நீங்கள் முழுமையாக முடித்திருக்க வேண்டும். இதற்கான நடைமுறைகள் தலைமை கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும்” என்றார்
பிரியா
நான் சாஃப்ட் ஆகிவிட்டேனா? கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!