சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர காரணம் அதன் கொள்கைகள் மட்டுமல்ல, தன்னலமில்லா தலைவர்கள் இருப்பதால் தான் வளர்ந்து இருக்கிறது.
எனக்கு முன்னதாக பேசிய அனைவரும் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்துச் சொன்னார்கள். இந்த மிகப்பெரிய வெற்றி நமது ஒற்றுமைக்குக் கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றி.
ஆனால் அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் என்ற நமக்கான பெரிய களம் காத்திருக்கிறது. புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.
நாற்பதும் நமதே, நாடும் நமதே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல. அது ஒரு கொள்கை யுத்தம்.
சாதியின் பெயரால் மக்களைப் பிடித்து சனாதனத்தின் ஆதரவாளர்கள் மார்க்ஸை பிளவுவாதி என்றார்கள். மார்க்சியத்தை நாடு முழுவதும் விதைக்கும் கடமை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் அனைத்திற்கும் இருக்கிறது.
நமது இயக்கங்களை நோக்கி வரும் இளைஞர்களை கொள்கை உரம் பெற்றவர்களாக மாற்றுவது தான் மாணிக்கம் போன்ற தியாகிகளுக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்.
பீகார் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தொழில் செய்து கொண்டிருக்கக் கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தம்முடைய வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காக, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காகத் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எப்படியாவது கலவரத்தை உருவாக்கி அரசியல் லாபம் தேட நினைகிறவர்களுக்கு ஒன்றைமட்டும் சொல்கிறேன். இன்று காலை கூட பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் தொலைபேசியில் பேசிவிட்டுத் தான் வந்திருக்கிறேன்.
எனவே, எந்த காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்த முடியாது.
சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் அவன் எந்த கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்” என்று பேசியிருந்தார்.
மோனிஷா
மோடி- உதயநிதி சந்திப்பு: மூடு மந்திரமான அந்த 40 நிமிடங்கள்- நிராகரித்த மம்தா, சுதாரித்த ஸ்டாலின்
பத்துதல படத்தில் சிம்பு கொடுத்த ’பஞ்ச்’ பதிலடி!