“துர்கா எந்த கோயிலுக்கு போறாங்கனு பார்க்கறதுதான் பாஜக வேலை” : ஸ்டாலின்

அரசியல்

என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவின் வேலை என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் இன்று (அக்டோபர் 21) திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “என்னுடைய பெயர், நான் யார், என்னுடைய பயோ டேட்டா என்ன என்றெல்லாம் உங்களுக்கு தெரியும். ஆனால், உங்களில் பலரின் பெயர் கூட எனக்குத் தெரியாது.

சிலரின் ஃபேஸ்புக், ட்விட்டர் ஐடி தெரியும். ஆனால், அது இவர்கள்தான் என்று தெரியாது. பெரும்பாலும், உங்கள் அனைவரின் பதிவுகளையும் என்னுடைய டைம்லைனில் படித்திருப்பேன்… ரசித்திருப்பேன்… சிலசமயம், அடடா… எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறார்கள்” என்று வியந்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன்.

சிலர் நீண்ட பதிவுகள் எழுதுவீர்கள். சிலர் ரத்தினச் சுருக்கமாக, க்ரிஸ்ப்பாக எழுதுவீர்கள். சிலர் மீம்ஸ் போடுவீர்கள். சிலர் பழைய வரலாற்றையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்துவீர்கள். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல். ஆனால் அது எல்லாமே தி.மு.க. ஸ்டைல்.

உங்கள் ஊர்,பெயர் தெரியவில்லை என்றால் என்ன? நாம் எல்லோரும் திமுககாரர்கள்தானே” என்று குறிப்பிட்டார்.

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்

Image

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,”என் டைம்லைனில் சிலரின் பதிவுகள் மிஸ் ஆனாலும், ஐடிவிங் செய்தித் துறை, உளவுத்துறை, என்னுடைய நண்பர்கள் என்று பலரும் உங்களின் பதிவுகளை எனக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், நான் உங்களின் ஃபாலோயர்.

பார்க்காமலேயே நண்பர்களாக இருந்த கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போலதான் நம்முடைய நட்பும் உறவும். அந்த நட்புணர்வோடுதான் உங்களை நான் இன்றைக்கு பார்க்க வந்திருக்கிறேன்.

இந்தச் சந்திப்பில் நான் ஷேர் செய்யும் செய்திகளை நீங்கள் லைக் செய்வீர்கள் என்று நம்புகிறேன். லைக் செய்தால் மட்டும் போதாது. அதை நீங்கள் ரீஷேர் செய்ய வேண்டும்,

திமுகவின் அப்டேட்டட் வெர்ஷன்

கரை வேட்டி கட்டியவர்கள் – கட்டாதவர்கள் என்று திமுககாரர்களைத் தலைவர் கலைஞர் இரண்டு வகைப்படுத்துவார். சிலர் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், ”தமிழினத்தின் மீட்சிக்காக உருவான இயக்கம் திமுகதான் என்று உரக்கச் சொல்லுவார்கள்.

கரை வேட்டி கட்டியவர்கள், சிங்கிள் டீ குடித்துவிட்டு வேலை பார்ப்பார்கள் என்றால், கரை வேட்டி கட்டாதவர்கள், எலக்‌ஷன் நேரத்தில், வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு செல்வார்கள். இந்த பாரம்பரியத்தின் அப்டேட்டட் வெர்ஷன்தான் நீங்கள்.

ஆண்டி-வைரஸ் அலர்ட்

Image

கட்சிக்கு அரணாக இருக்கும் கரை வேட்டி கட்டியவர்கள், போர்வாள். இணையத்தில் இயக்கத்துக்காக உணர்வுப்பூர்வமாக போராடுகிற நீங்கள், ஃபயர்வால்.

சிலசமயம் கட்சியின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்து எழுதுகிறீர்கள். உங்களின் விமர்சனத்தை ஆண்டி-வைரஸ் அலர்ட்டாகத்தான் நான் பார்க்கிறேன். கட்சியை விமர்சிக்க மற்ற எல்லாரையும் விட  கட்சியில் இருப்பவர்களுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது.

நம்முடைய இயக்கம் பேசிப் பேசி,  எழுதி எழுதி, வளர்ந்த இயக்கம். சமுதாயத்தை உயர்த்தக் கூடிய  இனமான எழுச்சியைத் தட்டியெழுப்பக் கூடிய, மொழி உணர்வை ஊட்டக் கூடிய வகையில் நம்டைய பேச்சுகளும் எழுத்துகளும் இருந்தன. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும்.

200க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள், ஏராளமான நாடகக் குழுக்கள், இசைக்குழுக்கள், பாடகர்கள் என்று சாமானியர்களின் மிகப்பெரிய பட்டாளமே இந்த இயக்கத்துக்காக உழைத்தது. அவ்வாறு, நானும் இயக்கத்தில் வந்து சேர்ந்து, நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

நாடகம் மட்டுமா,  பள்ளியில் பயிலும் போதே முரசொலிக்காக வேலை பார்த்தேன். கட்சி செய்திகளைத் தொகுத்து எழுதிக் கொடுப்பேன்.

நாளிதழ்களை ரயில் நிலையங்களுக்கு கொண்டு சென்று அனுப்பி வைப்பேன்.

’இளைய சூரியன்’ என்ற பத்திரிகையை சொர்ணம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு அதைத் தொடர்ந்து நடத்தினேன்.

முரசே முழங்கு’, ‘திண்டுக்கல் தீர்ப்பு’ போன்ற நாடகங்களில் ஊர் ஊராகச் சென்று நடித்திருக்கிறேன். ’ஒரே ரத்தம்’ திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ’நந்தக்குமார்’ கேரக்டரில் நடித்தேன்.

ஆற அமர கொஞ்சம் யோசித்துப் பாரு, நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்தித்துப் பாரு‘ என்று கலைஞர் எழுதிய பாடலை பாடி அதில் நடித்தேன். குறிஞ்சி மலர், சூர்யா போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறேன். இவ்வாறு, எல்லா விதமான ஊடகங்களிலும் வேலை  பார்த்திருக்கிறேன்.

இப்போது, ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்களிலும் கட்சிக் கொள்கைகளை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் இருக்கும் அட்வாண்டேஜ் என்னவென்றால், இதில் மக்களின் ரியாக்‌ஷனை உடனே தெரிந்து கொள்ளலாம். ஒரு கருத்தைச் சொன்னால் -உடனே ஆதரித்தும், எதிர்த்தும், வாழ்த்தியும், திட்டியும். அவதூறு பரப்பியும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்துவிடுகிறது. நம்முடைய கருத்துகள் நொடியில் கோடிக்கணக்கானவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது.

Image

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

’முரசே முழங்கு’ நாடகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு ரோடு ரோடாக ரிக்‌ஷாவில் சென்று போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். ஒருமுறை போஸ்டர் ஒட்டிவிட்டு, அதிகாலையில் நான்கு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

அப்போது ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில், “ஸ்டிக் நோ பில்ஸ் என்று போடப்பட்டிருந்த சுவரில் எதற்கு போஸ்டர் ஒட்டினீர்கள்?” என்று என் மேல் வழக்கு போட்டுவிட்டார்கள். அப்போது நான் முதலமைச்சரின் மகன். எதற்குச் சொல்கிறேன் என்றால், அப்போதே அப்படி இருந்தது திமுகவின் ஆட்சி. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தொடர்ந்து பேசினார்.

“திராவிட இயக்கம் என்பது தமிழினத்தைத் தலைநிமிர வைக்க பிறந்த இயக்கம். யார் தலையையும் எடுக்கப் பிறந்த இயக்கமல்ல. சீவுவேன்… சீவுவேன் என்று சொல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நெகட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, பாசிட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக்கொள்வதுதான் சரியானது.

தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியாரே பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்கள் , இயக்கங்கள், பத்திரிக்கைகள் என்று எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் பெரியார்.

அவர்களின் பெயரெல்லாம் பட்டியல் போட்டால் அதில் பலரை உங்களுக்கு யாரென்றே தெரியாது. ஆனால், பெரியார் இன்றைக்கும் வாழ்கிறார்.

“வாழ்க வசவாளர்கள்!” என்று சொல்லி தன்னுடைய எதிரிகளை அன்பால் வீழ்த்தியவர் அண்ணா.

”கூட்டில் இருக்கும் புழுக்களைப் போல் கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான்” – “நான் எனது எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது”, ”யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ, அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் நான்” என்று கலைஞர் சொன்னார். இதெல்லாம்தான் நமக்கான பாடங்கள்.

அதற்காக யாருக்கும் பதில் சொல்லக் கூடாது. எல்லா விமர்சனங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறை சொல்கிறவர்கள் – அவதூறு பரப்புகிறவர்கள் – பழி சுமத்துகிறவர்கள் – எல்லாக் காலத்திலும்தான் இருந்தார்கள்.

மருந்து கண்டுபிடித்துவிட்டால் நோய்க் கிருமிகள் ஒழிந்துவிடுமா என்ன? அதுமாதிரிதான். சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு இருந்த நோய்க் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம்.

அதனால், அந்த நோய்க் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்றைக்கு சோஷியல் மீடியாவும் சில மீடியாக்களும் அவர்கள் கண்ட்ரோலில் இருக்கிறது. அதனால், பொய் சொல்லவும் அவதூறு செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. இதற்குச் சரியான பதிலை நாம சொல்ல வேண்டும்.

இங்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 99 இலட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடி ஃபாலோயர்ஸ் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களின் தன்னார்வத்தால், தன்னலமற்ற செயல்பாட்டால் கழகத்துக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்து போயிருக்கிறதே தவிர, திமுகவை அவர்களால் கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை என்று சொன்ன பல பேர் கடைசியில் இங்குதான் அடைக்கலமானார்கள். இதுதான் வரலாறு.

ராஜாஜியும், ம.பொ.சி.-யும் இந்த இயக்கத்தைத் தொடக்க காலத்தில் எதிர்த்தார்கள். ஆனால், 1967 தேர்தலில் திமுகவை ஆதரித்தார் ராஜாஜி. உதயசூரியனிலேயே போட்டியிட்டார் மபொசி. அந்தத் தலைவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கொள்கை இருந்தது.

ஆனால் இன்றைக்கு, பாஜக, அதிமுக போன்ற வெகுஜன விரோதிகளுடன் நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டு இருக்கிறோம்.

எப்படியாவது மக்களைச் சாதியின் பெயரால் மதங்களின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பாஜகவின் பாசிசத்தன்மை ஏதோ நமக்கோ – நம் இயக்கத்துக்கோ – நம்மோட கொள்கைகளுக்கோ – நம்முடைய தமிழ்நாட்டுக்கோ மட்டும் எதிரானது அல்ல.  இந்தியாவுக்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது.

இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம் – இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அடிமை அ.தி.மு.க மறுபக்கம்.

கொள்கை என்றால், “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.முக.  இனிமேலும், பா.ஜ.க.வுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் மொத்தமாகப் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து, “உள்ளே வெளியே” ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பாஜகவுக்கு வேலையே இதுதான்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவும் அண்ணா பெயரில் கட்சி நடத்தி அதை பா.ஜ.க.விடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல! நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்தான் இருவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜகவினருக்கு இப்போது ஒரே வேலைதான். துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்- எனப் பரப்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர – ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல.

கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம். ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில். ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!”

கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது.

 

ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ் அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள்.

ஆனால், உண்மை என்ன? 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

யார் யாரிடம் இருந்து, எங்கே எங்கே இருந்து இந்தச் சொத்தெல்லாம் மீட்கப்பட்டது என அறநிலையத்துறை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்வதெல்லாம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோயிலை முறையாகப் பராமரித்தால் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைக்கும் கும்பலுக்குப் பிடிக்காது. அதனால் உண்மைகளைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

நம்முடைய கருத்துகளை இந்தியா முழுவதும் உள்ள மற்ற மொழி பேசும் சகோதர – சகோதரிகளிடம் எடுத்துச் செல்வோம். அப்படி நம்முடைய கருத்துகளை மற்ற மொழிகளில் கொண்டுபோகத்தான் Speaking for India பாட்காஸ்ட் தொடரைத் தொடங்கியிருக்கிறேன்.

இதுவரைக்கும், 2 எபிசோட் வந்திருக்கிறது – இதை மொத்தம் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

இப்படி, நம் கருத்துகள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இன்ஸ்டாகிராம், யூடியூப் என இளைய தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

லியோ : உண்மையில் ரூ.148.5 கோடி வசூலித்ததா?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: பாலச்சந்திரன்

”நூறு நாளில் 10 ஆயிரம் பாஜக கொடிக்கம்பங்கள்”: அண்ணாமலை சபதம்!

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0