விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். mk stalin slam edappadi palaniswami and bjp
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 5) விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநருக்கு மாநில உரிமைகள் பற்றிப் பாடம் எடுக்கும் பேராசிரியர் முனைவர் பொன்முடி” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நாட்டை நிர்வகிக்கும், ஒன்றிய அரசு செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை. அதேபோல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர் – உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் – இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும் – பட்டியலின – பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை.
இதைப் பற்றி, நீங்கள் சிந்தித்தாக வேண்டும். உங்களில் பலரும் இப்போது படித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அப்பா–அம்மா, அவர்களின் அப்பா-அம்மாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! எதிர்காலத்தில், உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குச் செல்ல வேண்டாமா? கடந்த இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். நல்ல மரியாதையான வேலைகளுக்கு வந்திருக்கிறோம்.
இதற்கு என்ன காரணம்? நாங்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடும்; சமூகநீதியும்தான். இன்னும் நமக்கான பிரதிநிதித்துவம் சரியாக – முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம்? பா.ஜ.க.! இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஏன்? ஒவ்வொருமுறையும் “இடஒதுக்கீடு எங்கள் உரிமை” என்று போராட வேண்டியிருக்கிறது, ஏன்?… ஏனென்றால், ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி, பா.ஜ.க.
பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள். நம்முடைய மக்களை, நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அவர் “திமுக ஆட்சியைக் குறைசொல்லி ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
மகளிர் உரிமைத்தொகையை நாம் அறிவித்ததும் என்னவெல்லாம் பேசினார் இந்த பழனிசாமி? தி.மு.க. கொடுக்க மாட்டார்கள். ஏமாற்றிவிடுவார்கள் என்று பிரச்சாரம் செய்தார்… இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார்… பழனிசாமி பேசுவதைப் பார்த்தால்… ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், ”ஒரு மனுஷன் பொய் பேசலாம்… ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது!” என்று அந்த காமெடிதான் என் ஞாபகத்திற்கு வருகிறது! பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி… எத்தனை ஆண்டுகளானாலும் ”உரிமைத் தொகையை ஸ்டாலின் அண்ணன்தான் கொடுத்தார்” என்றுதான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள்.
பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, உத்தமபுத்திரன் போன்று ஊர்வலம் சென்று வாய்க்கு வந்தபடி புலம்பும் பழனிசாமியின் லட்சணம் என்ன? மோடி இந்தியாவைச் சீரழித்தார் என்றால், தமிழ்நாட்டைச் சீரழித்த பாவத்தை செய்தவர் பழனிசாமி.
பழனிசாமி ஆட்சிதான், தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த பாவத்தைச் செய்தவர் பழனிசாமி! கொடநாடு கொலை – கொள்ளை – தற்கொலை நடந்த ஆட்சியை நடத்தியவர்! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்து, குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்! இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டுக்குள் பழனிசாமி ஆட்சிதான் அனுமதித்தது. அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. மீது சி.பி.ஐ. வழக்கு போட்டதும் பழனிசாமி ஆட்சியில்தான்!
பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை நடந்தபோது, அதை வேடிக்கை பார்த்தவர் பழனிசாமிதான்! சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சியை நடத்தியவர்!
நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனே… ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தேன்… அந்தக் கோப்புகளைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது… அறிவிப்புகளை வெளியிட்டதுடன் சரி… அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகூட போடாமல் அம்போ என்று விட்டுவிட்டு சென்றிருந்தார் பழனிசாமி.
ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்கக் கூடாது – எப்படி அலங்கோலமாகச் செயல்படக் கூடாது – என்பதற்கு எடுத்துக்காட்டுதான், பாதம்தாங்கி பழனிசாமியின் நான்காண்டுகால ஆட்சி!
அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தைச் சீர்திருத்த, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று! கோட்டையில் இருந்து மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் போதாது – ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வுகளை நடத்தினேன்.
இது ஒருபக்கம் என்றால், அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார். நிதிநிலைமையைச் சரி செய்யவே ஒரு கமிட்டி போட்டேன்… அதுவும் சாதாரண கமிட்டி இல்லை… இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், பொருளாதார அறிஞர்களின் குழுவை அமைத்தேன். இப்படியெல்லாம், அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து – ஆய்வுகளை செய்து – பழனிசாமியின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து, இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல – உலக நாடுகள் பலவும் கவனிக்கும் – சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.
பழனிசாமி தமிழ்நாட்டை மட்டும் அடகு வைக்கவில்லை; அ.தி.மு.க.வையும் சேர்த்துதான் அடகு வைத்திருக்கிறார். அதனால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல – உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை!
இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தோற்ற பழனிசாமி, இந்தத் தேர்தலிலும் தோற்கத்தான் போகிறார். ஆனால், இப்போதுகூட, பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி இல்லை என்று விழுந்து புரண்டு நடிக்கிறார்.
பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என்று தெரிவித்த அவர், “ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே – என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது” எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சூரியனுக்கு மிக அருகில்: அப்டேட் குமாரு
mk stalin slam edappadi palaniswami and bjp