டிஜிட்டல் திண்ணை: போன் மேல் போன் போட்ட ஸ்டாலின்… சீமான் டெபாசிட் தேறுமா? ஈரோடு கிழக்கு க்ளைமாக்ஸ்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் தயாராகும் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. mk stalin seeman erode east climax

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கிறது.

வியூகத்தை மாற்றிய ஸ்டாலின்

இந்த இடைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்ததன் காரணமாக,  திமுக வழக்கமான இடைத்தேர்தல் வியூகத்தை மாற்றியது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்  வார்டு வார்டாய் பிரித்துக்கொண்டு 2023 இல்  தேர்தல் வேலை செய்ததுபோல இல்லை. மாவட்ட அமைச்சர் முத்துசாமியிடம் மட்டுமே பொறுப்பு கொடுக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிநிதி உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகள் யாரும் ஈரோடு பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. அதேநேரம் கடந்த 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  சுமார் 300 திமுக நிர்வாகிகளிடம் போனில் உரையாடியிருக்கிறார்.

ஹலோ… நான் ஸ்டாலின் பேசறேன்…

இத்தொகுதியில் இருக்கும் 237  திமுக  பூத் ஏஜென்ட்டுகள்,  33 வார்டு செயலாளர்கள், 8 பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலினே போன் செய்து உரையாடி அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

பூத் ஏஜென்ட்டுகளிடம் பேசிய ஸ்டாலின், ‘இடைத் தேர்தல் களம் எப்படி இருக்கு?’ என விசாரித்ததோடு… ‘உங்களுக்கு தலைமையில இருந்து ஏற்கனவே பயிற்சி கொடுத்திருக்கோம். அதுப்படி நடந்துக்கங்க.  என்னதான் தலைவர்கள் பிரச்சாரம் பண்ணாலும் தேர்தல் அன்னிக்கு வாக்குகளை நம் கட்சிக்கு கொண்டு வந்து சேர்க்கிற முக்கிய வேலையில நீங்க இருக்கீங்க. அதை கரெக்ட்டா செய்ங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

வார்டு, பகுதி  செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியபோது, ‘தலைவரே நாமதான் ஜெயிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஸ்டாலின், ‘நாமதான் ஜெயிப்போம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த வெற்றி எப்படி இருக்கணும்குறதுதான் முக்கியம், நமக்கு எதிராக நிற்பவர்கள் டெபாசிட் வாங்கக் கூடாது.  அவர்கள் மிகக் குறைந்தபட்ச வாக்குகளை வாங்கணும்… நாம மிக அதிகபட்ச வாக்குகளை வாங்கணும். அதுதான் நமது வெற்றிக்கு மரியாதை’ என்று சொல்லியிருக்கிறார்.

சீமான் டெபாசிட்! -திமுக டார்கெட்!

இந்த இடைத் தேர்தலில் சீமான் மிகக் குறைந்த பட்ச வாக்குகளை வாங்கி டெபாசிட் இழக்க வேண்டும் என்பதுதான் திமுகவினரின் டார்கெட் ஆக இருக்கிறது. mk stalin seeman erode east climax

2023 இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10 ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசின்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக  ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.  அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்றார்.

2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 12 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறது.

இந்த நிலையில் இப்போது நடக்கும் இடைத் தேர்தலில் அதிமுகவும் போட்டியிடவில்லை. பாஜகவும் போட்டியிடவில்லை. பெரியாரை சீமான் கடுமையாக வசைபாடி இந்தத் தேர்தலை சந்திக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அதிமுகவினரின் வாக்குகளில் மூன்றில் ஒரு பங்காவது  அதாவது சுமார் பதினைந்தாயிரம் வாக்காவது தங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார் சீமான்.  இந்த கணக்கு ஒர்க் அவுட்  ஆனால், சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வரை நாம் தமிழர்  பெற முடியும்.

ஆனால் இதற்குத்தான் திமுக மிகத் தீவிரமாக க்ளைமாக்ஸ் செக் வைத்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி அதிமுகவில் நீண்ட ஆண்டுகள் இருந்துவிட்டு திமுகவுக்கு வந்தவர். இன்றைக்கும் அவரோடு ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நல்ல பழக்கத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு அதிமுக நிர்வாகியையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அறிமுகம் பெற்ற முத்துசாமி, ‘இதோ பாரு… அதிமுக காரன் நீ… உன்னை திமுகவுக்கு ஓட்டு போட சொல்லி  கேட்கமாட்டேன்.  நீ வேற யாருக்கும் வேணும்னாலும் போடு… நோட்டாவுக்கு கூட போடு. ஆனா அந்த சீமான் கட்சிக்கு போட்டுவிடாதே…’ என்று பேசியுள்ளார். பல அதிமுக நிர்வாகிகள் முத்துசாமியின் தனிப்பட்ட கவனிப்புக்கும்  ஆளாகியிருக்கிறார்கள்.

பெரியாரை இகழ்ந்து அண்ணாவை புகழ்ந்த சீமான்

இந்நிலையில் தான், பிப்ரவரி 3 ஈரோடு கிழக்கு தொகுதியின் கடைசி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சீமான் திமுகவின் நிறுவனரான அண்ணாவின் நினைவு நாளை குறிப்பிட்டு திடீரென அவரைப் புகழ்ந்திருக்கிறார்.  

’முதல் முதலாக ஐயா பெரியார் அவர்களை எதிர்த்து தனியாக ஒரு அரசியல் இயக்கம் கண்டவர். கடவுள் இல்லை என்ற கருத்தை கைவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தை முன் வைத்தவர். mk stalin seeman erode east climax

மதுவை வைத்து வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்க்கு சமம். மதுவால் வரும் வருமானத்தில் அரசு நடத்த மாட்டேன் என்று சொன்னவர் அண்ணா.  பெரியார் வருவதற்கு முன் இரு முதுகலை பட்டங்களைப் பெற்றவர் அண்ணா. நல்லாட்சி கொடுத்த நாயகன் அண்ணா. மாற்றான் தோட்டத்தின் மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்னவர் அண்ணா. அவர் அரசியல் களத்துக்கு வந்த பிறகுதான் மேடைகளில் தமிழர்களின் இலக்கியமும் வரலாறும் பேசப்பட்டது பேரறிஞர் அண்ணாவை போற்றுகிறோம்’ என்று பேசினார் சீமான்.

பிரச்சாரம் முழுதும் பெரியாரை கடுமையாக தாக்கிய சீமான்…  பிரச்சாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணாவை போற்றிப் புகழ்ந்தது, அதிமுகவினரில் சிலராவது தனக்கு ஓட்டுப் போடுவர்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் என்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகிறது. ஆனபோதும் சீமான் வாங்கப் போகும் வாக்குகள் எவ்வளவு, அவர் டெபாசிட் வாங்குவாரா என்பதுதான் தேர்தல் முடிவை விட அதிகமாக எதிர்பார்க்கப்படும் விஷயம்” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share