மூன்று ஆண்டுகளில் 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… அமெரிக்கா செல்லும் முன் ஸ்டாலின் பேட்டி!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகாலத்தில் இதுவரை 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,”அரசு பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க நான் இதுபோன்ற பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நான் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாக, தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது.
இந்த பயணங்கள் மூலமாக 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், ரூ.10,882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதில் ரூ.990 கோடி முதலீட்டுக்கான ஐந்து திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த ஐந்து திட்டங்களில் சிங்கப்பூரை சேர்ந்த ஐபி நிறுவனத்தின் திட்டத்தையும், ஜப்பானின் ஓம்ரான் நிறுவனத்தின் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்தேன். இந்த நிறுவனங்களில் மட்டும் 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரூ.3,796 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பானின் மிட்சுபா மற்றும் சப்ட்ராக்ட் நிறுவனங்களின் திட்டங்கள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
ரூ.3,540 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்கள் பல்வேறு முன்னேற்றங்களில் இருக்கிறது. ரூ.430 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையை அடைந்திருக்கிறது.
ரூ.2,100 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களை பொறுத்தவரையில் அந்தந்த நிறுவனங்களின் தொழில் முதலீட்டு சூழல் காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் துரிதமான நிலையில் செயல்பட்டு வருகிறது என்பதை நான் ஆதாரப்பூர்வமாக விரிவாக குறிப்பிட்டேன். அதனால் தான் இதுபோன்ற பயணங்கள் மிக மிக முக்கியமானவை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகாலத்தில் இதுவரை 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9,99,993 கோடி ஆகும். இதன் மூலம் 18,89,234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். 4, 16,717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது கடந்த வெளிநாட்டு பயணம் மூலமாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால், பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டிலும் இருக்கிறது. அதைபோல, தற்போதைய பயணம் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை தொடர்ந்து கண்காணித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன்.
அந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நமது இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகோகா மாநகரங்களுக்கு நான் செல்கிறேன். அமெரிக்க வாழ் தமிழர்களை அங்கு சந்திக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது என்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு? அப்டேட் குமாரு
மதுபான வழக்கு… கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!