தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்றும் இதன் மூலம் 18,89,234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அமெரிக்கா சென்று வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சற்று நேரம் மவுனம் காத்த ஸ்டாலின், சிரித்தபடியே, “மாற்றம் ஒன்றே மாறாதது. Wait and See” என்றார்.
ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது பற்றி ஸ்டாலின் கூறுகையில், “அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். துரைமுருகன் சொன்ன மாதிரி இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.
ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் அமைச்சர்கள் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் வந்த நிலையில், ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, எனக்கு அப்படி ஒன்றும் தகவல் வரவில்லை என்றார்.
இந்தநிலையில், அமெரிக்க பயணத்திற்கு பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு ஸ்டாலின் சூசகமாக பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று ஆண்டுகளில் 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… அமெரிக்கா செல்லும் முன் ஸ்டாலின் பேட்டி!
இது என்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு? அப்டேட் குமாரு