இன்று முதல் ஓராண்டு முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, “தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் 74 நாட்கள் சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இன்று வரை வைக்கம் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பெரியாரின் நினைவுகளை போற்றவும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்வுகளை கொண்டாடவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இன்று முதல் ஓராண்டு முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது. போராட்டத்தின் வரலாற்றையும் நோக்கத்தையும் வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கலந்து கொள்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.
நவம்பர் 29-ஆம் தேதி தமிழ்நாடு கேரளா இரு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் வெகு சிறப்பான நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
பெரியார் நினைவை போற்றும் வகையில் பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மாநில மக்களின் நலனுக்காக போராடிய குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி வைக்கம் விருது வழங்கப்படும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடம் நவீன முறையில் சீரமைக்க 8.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாக சிறைவைக்கப்பட்டிருந்த அருவிக்குத்து கிராமத்தில் பெரியார் நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டின் நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் கருத்தரங்குகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்