பாஜகவின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றார். அங்கு அவருக்கு கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பெங்களூருக்கு செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துவதால் பாஜக ஆட்சிக்கு எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் தான் அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளார்கள். ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணியை செய்து கொண்டிருந்தனர். தற்போது தமிழகத்திலும் செய்து கொண்டிருக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்தநிலையில் பெங்களூரு சென்ற முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாட்னா ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பெங்களூரில் கூடியுள்ளோம். இந்த முக்கியமான தருணத்தில் பாஜகவின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் உதாரணமாகும். இதனை தேசிய அரசியலிலும் பிரதிபலிக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஏழு நாட்களுக்கு மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… பாட்டு பாடி பதில் சொன்ன துரைமுருகன்