முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், துணை முதல்வர் பதவி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டாமா? இன்னும் ஏன் தயக்கம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து சீனியர் அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோரும் விரைவில் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் , உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது முடிவாகிவிட்டது என்று கடந்த செப்டம்பர் 19-ஆம் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் துவக்க பள்ளி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“கொளத்தூர் எப்போதும் என்னுடைய சொந்த தொகுதி. நம்ம வீட்டு பிள்ளை மாதிரி பார்க்குற தொகுதி. அதனால நான் நினைத்த நேரத்தில் இந்த தொகுதிக்கு வருவேன்” என்றார்.
வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து, “வெளிநாடுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்பது ஏமாற்றுகிற நிதி ஒதுக்கீடு இல்லை. இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுவே வெள்ளை அறிக்கை தான்” என்றார்.
தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது. மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லெபனான் மக்கள் மீது பரிவு காட்டும் இஸ்ரேல் பிரதமர்: வீடியோ வெளியிட்டு விளக்கம்!