முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்டோபர் 24) நடைபெற்றது. இந்த நிகழ்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஸ்டாலின் விருது அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி இப்போது துணை முதலமைச்சர் ஆனதில் உங்களுடைய பங்கும் இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.
விளையாட்டுத் துறையை மிகச் சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக உதயநிதி மாற்றி காட்டியிருக்கிறார். அப்படி பார்த்தால், துறையும் வளர்ந்திருக்கிறது. துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்.
நாம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டை பொழுதுபோக்காக நினைக்கும் ‘மைண்ட்செட்’-யை மாற்றி, ஸ்போர்ட்சில் ஒரு ‘கேரியராக’ இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ப்ரொமோட் செய்து இருக்கிறோம்.
அதனால்தான், இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாட்டில் 114 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தினோம். 186 நாடுகளிலிருந்து, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் அந்தப்போட்டியில் பங்கேற்றார்கள்.
வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த செஸ் வீரர்களுக்கெல்லாம், நாம் அளித்த வரவேற்பு குறுகிய காலத்தில் போட்டிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த முறை – தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் அவர்களுக்குக் கொடுத்த விருந்தோம்பல் என்று எல்லாவற்றையும் மனதாரப் பாராட்டினார்கள். அந்த செஸ் போட்டியின் துவக்க விழாவும் மீடியாக்களில் வைரலானது.
தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பாக அது அமைந்தது. அதேபோன்று, “சென்னை ஓபன் WTA உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022″ போட்டி, ஸ்குவாஷ் உலகக்கோப்பை 2023, ‘சென்னை செஸ் கிரண்ட்மாஸ்டர் 2023’ உள்ளிட்ட ஏராளமான போட்டிகளை எல்லோரும் பாராட்டும்படி நடத்தியிருக்கிறோம்.
இதுபோன்று நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறது. பலரையும் அந்த விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கிறது. தொழில் முறை விளையாட்டு வீரர்கள் உருவாக ஊக்கமளிக்கிறது.
நம்முடைய விளையாட்டுத் துறை, எத்தனையோ மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. இந்தியாவை மட்டுமல்ல. உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக, விளையாட்டுத் துறையில் புகழ் பெற்றுள்ளது தமிழ்நாடு. விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கான திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதைத்தான் உதயநிதி இன்றைக்கு செய்துக்கொண்டிருக்கிறார். அதற்கான அடித்தளங்களில் மிகமிக முக்கியமானது, இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள். வீரர்கள், தங்களின் திறமைகளை வளர்க்க, ஒற்றுமையை ஊக்குவிக்க, ஆற்றல்களை வெளிக்கொணர, புதிய சாதனைகளைப் படைக்க, வாய்ப்புகளை பெற, இந்தபோட்டி வழிவகுக்கிறது.
இன்றைய இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்கப்பட்ட எல்லா வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இந்த வெற்றிகளுக்காக எடுத்த முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பாராட்டுகிறேன்.
உங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான எல்லா ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்போட்டிகளில் பங்கேற்கும் இளம் திறனாளர்களை கண்டறிந்து, அவர்களை முறையாக டிரெயின் (Train) செய்வதுதான் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் முக்கிய நோக்கம்.
விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, எத்தனையோ திட்டங்களை நாங்கள் செயல்படுத்துகிறோம். கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிற்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு சரிசமமான முக்கியத்துவத்தை கொடுக்கிறது.
நம்முடைய திட்டங்களையும், உருவாக்கித்தர வாய்ப்புகளையும் பயன்படுத்தி. நீங்கள் உலகளவில் பெருமை பெற வேண்டும். இதற்கான எல்லா ஆதரவையும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, விளையாட்டு என்பது, வெறும் போட்டி இல்லை. அது உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடியது. உங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவள்ளூர் ரயில் விபத்து… என்.ஐ.ஏ சம்மனுக்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு!
விஜய் கட்சியைப் பார்த்து பயமா?