“நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ட்டம் மார்க் ஸ்கோர் செய்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 27) பாராட்டியுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “திமுக என்பது பேசி பேசி வளர்ந்த கழகம். அந்த காலத்தில் பேசி பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சி திமுக என்று சொல்வார்கள். ஆனால், நாம் வெறும் அலங்கார அடுக்குமொழியை பேசவில்லை. உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளை பேசினோம், உலக அறிஞர்களின் வரலாற்றை பேசினோம், நாட்டில் நடந்த கொடுமைகளை பேசினோம், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பேசினோம்.
பேச்சுக்கலை என்பது மிகவும் வீரியம் மிக்கது. அதனால், இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை இளைஞரணியிடம் ஒப்படைத்தேன். ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்கிறார் வள்ளுவர். அப்படித்தான் இளைஞரணி பொறுப்பை உதயநிதியிடம் ஒப்படைத்தேன். இளைஞரணி செயலாளர் என்பது வெறும் பதவியல்ல, பெரும் பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் செயல்பட்டு வருகிறார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த பொறுப்பை நான் அவருக்கு கொடுத்ததை பயிற்சியாக கருதுகிறேன். நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் அவர் சென்ட்டம் மார்க் ஸ்கோர் செய்கிறார். 2019-ல் அதிமுக ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், கொரோனா காலத்தில் உதவிகள், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் என ஏராளமானப் பணிகளை செய்து வருகிறார்.
அதுமட்டுமல்ல, இளைஞரணியின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்திக் காட்டினார். அந்த மாநாட்டில் நான் பேசும்போது, ‘இந்த இயக்கத்திற்கு நூறாண்டுகளுக்கான போர்வீரர்கள் தயாராகிவிட்டார்கள்’ என்று சொன்னேன். அந்த களப்போர் வீரர்களுக்கு துணை நிற்கக்கூடிய சொற்போர் வீரர்களை அடையாளம் காணும் முன்னெடுப்பு தான் இது.
இந்த முன்னெடுப்பின் மூலமாக அடையாளம் காணப்பட்டிருக்கக்கூடிய உங்களால் திமுக வளரும், தமிழகமும் மேன்மையடையும். இதுநான் நம்முடைய லட்சியம். அந்த லட்சியப் பாதையில் இளைஞரணி வேகமாக நடைபோடுகிறது. அதற்கு உதயநிதிக்கும் அவருக்கு துணை நிற்கும் இளைஞரணியினருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் ஸ்டாலின்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘என்ன கட்ஸ் சார்’ – ‘நந்தன்’ பட இயக்குநருக்கு நடிகர் ரஜினியிடம் இருந்து வந்த திடீர் போன்!
விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!