திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற தொடர் மூலம் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். Mk Stalin says Union Budget
அந்தவகையில், இன்று (பிப்ரவரி 15) அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை, பெயர்கூட சொல்வதில்லை.
மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளி விவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள். ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக்கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.

இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே “அற்பசிந்தனை” என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்திருக்கிறார்களே?
மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அவராகப் பதவி விலகவில்லை. வேறு வழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிந்தது. 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். மாநிலத்தின் முதலமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.
நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதலமைச்சரே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று, இப்போது அவர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சியும், பாஜக எம்எல்ஏ-க்களுமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்கள்.
பாஜக ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தர பிரதேசமாக இருந்தாலும் இந்த அளவில்தான் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநிலத்தை பற்றிக் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள்.
நம்மை பொருத்தவரை, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக் காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். Mk Stalin says Union Budget