அரசு பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியன் அசூரன்ஸில் அலுவல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மொழியாக 100 சதவிகிதம் இந்தி மொழியை மட்டுமே பேச, எழுத வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளை காட்டிலும் இந்தி மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மக்கள் நலனுக்காக செயல்படாமல் இந்தி மொழியை நம் மீது திணிப்பதில் குறியாக உள்ளனர்.
நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தின் நியாயமற்ற சுற்றறிக்கையை அவர்கள் திரும்ப பெற வேண்டும். அங்கு வேலை செய்யும் இந்தி பேசாத தொழிலாளர்களை அவமரியாதை செய்த அந்நிறுவனத்தின் தலைவர் நீரஜ் சோப்ரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தி பேசாத இந்திய குடிமக்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையால் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுவதை பொறுத்துக்கொள்ளும் நாட்கள் கடந்துவிட்டன.
தமிழகமும் திமுகவும் இந்தி திணிப்பிற்கு எதிராக பாடுபட்டது போல இந்தி திணிப்பிற்கு எதிராக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். ரயில்வே, தபால் துறை, வங்கி மற்றும் பாராளுமன்றம் போன்ற அனைத்து இடங்களிலும் இந்தி மொழிக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம்.
நாங்கள் எங்கள் வரியை செலுத்துகிறோம். நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம். நமது வளமான பாரம்பரியம் மற்றும் தேசத்தின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். இந்தியாவில் உள்ள மொழிகள் சமமாக மதிக்கப்பட வேண்டும். நம் நிலத்தில் தமிழுக்கு மாற்றாக இந்தி மொழியை திணிக்க முயற்சித்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்