mk stalin says tamilnadu micro small scale industries

“தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி முக்கியமானது” – ஸ்டாலின்

அரசியல்

தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி முக்கியமானது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்றும் நாளையும் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “கல்வி சிறந்த தமிழ்நாடு, கலைகள்‌ சிறந்த தமிழ்நாடு என்பதுபோல தொழில்கள்‌ சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி நாம்‌ முன்னேறிக்‌கொண்டு இருக்கிறோம்‌.

பன்னாட்டு நிறுவனங்களின்‌ முதலீடுகளுடனான தொழில்நிறுவனங்கள்‌ முக்கியம்தான்‌. ஆனால்‌, சிறு – குறு தொழில்களின்‌ வளர்ச்சி அதைவிட முக்கியமானது.

அந்த வகையில்‌, தொழில்‌ வளர்ச்சியில்‌ தமிழ்நாட்டின்‌ திராவிட மாடல்‌ அரசு அக்கறை செலுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியில்‌, தமிழ்நாடு புத்தொழில்‌ மற்றும்‌ புத்தாக்க இயக்கத்தின்‌ பங்கு முக்கியமானது.

தமிழ்நாட்டின்‌ உட்கட்டமைப்பையும்‌ தொழில்கட்டமைப்பையும்‌ மேம்படுத்தியவர்‌ கலைஞர்‌. அவருடைய நூற்றாண்டில்‌ “சமூகநீதியுடன்‌ கூடிய சமச்சீர்‌ தொழில்‌ வளர்ச்சி” என்ற அடிப்படையில்‌ இதுவரை நடக்காத அளவு, பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில்‌ வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும்‌, கண்காட்சியையும்‌ நடத்த வேண்டும்‌ என்று முடிவு செய்து, அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன் என்னிடம்‌ கூறியபோது, இந்த நிகழ்ச்சியை நான்‌ கோவையில் நடத்த அவரைக்‌ கேட்டுக்‌ கொண்டேன்‌. ஏனென்றால்‌ கோவைதான்‌ தென்னிந்தியாவின்‌ மான்செஸ்டர்‌.

அந்த வகையில்‌ இந்த நிகழ்ச்சியில்‌, சுமார்‌ 450 அரங்குகள்‌ கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, இதைப்‌ பார்வையிட பத்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட தொழில்முனைவோர்களும்‌, ஆர்வலர்களும்‌, மாணவர்களும்‌ வர இருக்கிறார்கள்‌.

புத்தாக்கங்கள்‌ மற்றும்‌ புதுயுகத்‌ தொழில்‌ முனைவை மேம்படுத்துவதில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தவும்‌, அனைவரையும்‌ உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகவும்‌ கொண்டு, நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு Tamilnadu startup and Innovation Mission உயிர்‌ கொடுக்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ அமல்படுத்தப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும்‌.

2021 மார்ச்‌ மாத நிலவரப்படி, சுமார்‌ 2300 ஸ்டார்ட்‌அப்‌ நிறுவனங்கள்‌ மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால்‌, நாம்‌ ஆட்சிக்கு வந்தப்‌ பிறகு எடுத்த முயற்சிகளின்‌ பலனாக, இந்த இரண்டு. ஆண்டுகளில்‌ இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும்‌ மேல்‌ உயர்ந்திருக்கிறது.

புத்தாக்க சிந்தனையோடு தொழில்‌ முனைவில்‌ ஈடுபடுகிற, தொடக்க நிலை புத்தொழில்‌ நிறுவனங்களுக்கு, ‘டான்சீட்‌’ எனும்‌ தமிழ்நாடு புத்தொழில்‌ ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌, ரூ.10 கோடி ரூபாய்க்கும்‌ மேல்‌, நிதி வழங்குவதற்கான ஒப்புதல்‌ ஆணைகள்‌ வழங்கப்பட்டிருக்கிறது.

புத்தொழில்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சி, பெரு நகரங்களைத்‌ தாண்டி, மாநிலத்தின்‌ எல்லா பகுதிகளையும்‌ சென்றடைய வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, கடந்த 2022-23ஆம்‌ நிதி ஆண்டு மதுரை, ஈரோடு மற்றும்‌ திருநெல்வேலி ஆகிய நகரங்களில்‌, வட்டாரப்‌ புத்தொழில்‌ மையங்கள்‌ நிறுவப்பட்டுள்ளது.

மேலும்‌, நடப்பு நிதி ஆண்டில்‌ சேலம்‌, ஒசூர்‌, கடலூர்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ ஆகிய இரண்டாம்‌, மூன்றாம்‌ கட்ட நகரங்களிலும்‌ வட்டாரப்‌ புத்தொழில்‌ மையங்கள நிறுவிட பணிகள்‌ நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த முன்னெடுப்பில்‌, சமூக நீதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆதிதிராவிட மக்களால் நிறுவப்படுகிற புத்தொழில்‌ நிறுவனங்களுக்கு, பங்கு முதலீடாக வழங்க, கடந்த நிதி ஆண்டில் 30 கோடி ரூபாய்‌ சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்தத்‌ திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத்‌ தொடர்ந்து, இந்த நிதி ஆண்டில் சிறப்பு நிதி 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

புதுயுகத்‌ தொழில்‌ முனைவில்‌ ஈடுபடுகிற, தொழில்‌ முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள்‌ அவசியம்‌ என்பதால்‌, தகுதி வாய்ந்த Mentor-களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ இணைப்பதற்காக Mentor Tn வழிகாட்டி மென்பொருள்‌ தளத்தையும்‌ தொடங்கியிருக்கிறாம்‌.

மேலும்‌, முதலீட்டாளர்களையும்‌,  புத்தொழில்‌ முனைவோர்களையும்‌ இணைப்பதற்காக, முதலீட்டாளர்‌ இணைப்புத்‌ தளம்‌ தொடங்கப்பட்டு, அதன்‌ வழியாக, பல முதலீட்டாளர்‌ – தொழில்‌ முனைவோர்‌ இணைப்பு நிகழ்வுகள்‌ நடைபெற்று வருகிறது.

துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில்‌, கடந்த ஜூலை மாதத்‌ தரவுகள்‌ அடிப்படையில்‌, இந்திய நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில்‌ இருக்கிறது. மந்தமான முதலீட்டுச்‌ சூழலிலும்‌ சென்னை சார்ந்த நிறுவனங்கள்‌ மேல்‌ முதலீட்டாளர்கள்‌ வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது.

இந்த நம்பிக்கைக்கு காரணம்‌, தமிழ்நாட்டு மக்கள்‌ நம்‌ மேல்‌ நம்பிக்கை வைத்து வழங்கிய ஆட்சி அதிகாரம் தான்‌.

புத்தொழில்‌ முனைவோர்களுக்கு, உலகளாவிய முதலீடு மற்றும்‌ சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்‌ தரும்‌ நோக்கத்தோடு, உலக வர்த்தக மையமாக மாறிவரும்‌ துபாயில்‌, ஒருங்கிணைப்பு மையம்‌ ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.

நமது திராவிட மாடல்‌ அரசு பொறுப்பேற்ற பிறகுதான்‌ மத்திய அரசின்‌ ஸ்டார்ட்‌அப்‌. இந்தியா இணைப்பு வழங்குகிற “விடர்‌ அங்கீகாரம்‌, தமிழ்நாட்டிற்குக்‌ கிடைத்திருக்கிறது.

நம்முடைய தமிழ்நாட்டை புத்தொழில்‌ நிறுவனங்களுக்கேற்ற மாநிலமாக மாற்றி, உலகின்‌ முதன்மை மாநிலமாக மாற்றுவோம்‌” என்று தெரிவித்தார்.

செல்வம்

அதிமுக மாநாடு : எடப்பாடிக்கு எதிராகத் திரண்ட முக்குலத்தோர்!

இந்திய குற்றவியல் சட்ட மசோதா: வில்சன் வைத்த கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *