அரசை தேடி மக்கள் போன காலம் போய், மக்களை தேடி அரசு செல்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 5) மதுரை சென்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு தொழில்கள், விவசாயம், தோட்டக்கலை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அவர்கள் தங்களது மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, “அரசை தேடி மக்கள் போன காலம் போய், மக்களை தேடி அரசு செல்கிறது. நான் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசு விழாக்களில் மட்டும் மனு வாங்காமல் காரில் செல்லும் போது கூட பலரிடம் மனுக்கள் பெறுவேன்.
குறு சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய வளர்ச்சிக்காக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். நிச்சயமாக அதனை பரிசீலித்து நிறைவேற்றுவோம்.
நான் ஒவ்வொரு சங்கத்தையும் தனித்தனியாக இங்கு குறிப்பிடாவிட்டாலும் உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் குறித்து வைத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அரசு துறைகளுடன் கலந்து பேசி, உங்கள் மாவட்ட ஆட்சியர் மூலமாக படிப்படியாக அதனை நிறைவேற்றி தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் 25 சதவிகித திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
ஜெயம் ரவியின் அகிலன்: ஹிட்டடிக்குமா?…படக்குழுவினர் சொல்வது என்ன?
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!