“தமிழகத்தில் தொழில்துறை வேகமாக முன்னேறி வருகிறது” – ஸ்டாலின்
தமிழகத்தில் தொழில்துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 17) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், ரூ.254 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,
“இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமாக முன்னேறி வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய இலட்சியத்தினைக் கொண்டதாக இருக்கின்றது.
அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது. வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.
இந்த நிதிநுட்ப நகரத்தில், இந்திய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு, ஏற்றவகையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துத்தர இருக்கின்றோம்.
சென்னை மாநகரத்தின் மையப்பகுதியான நந்தம்பாக்கத்தில், 56 ஏக்கர் நிலத்தை, இதற்கென ஒதுக்கி இருக்கிறோம். இதன்மூலம், நிதிநுட்பத் துறையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 80 ஆயிரம் நபர்களுக்கு. வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
மேலும், இங்கு 5.6 இலட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு நிதிநுட்ப கோபுரம் ஒன்றை அமைக்க உள்ளோம். இதன்மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறக்குறைய 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களான நிதிச்சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளின் மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.
இது வெறும் தொடக்கம் தான். நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில் உங்கள் அனைவரின் ஈடுபாட்டையும் நான் வரவேற்கிறேன். உங்கள் நிதிநுட்பத் தீர்வுகள் மூலம், தமிழ்நாட்டினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன்.
ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்று. சிறப்பிக்குமாறும் உங்கள் துறை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செல்வம்
கூடுதல் இலாகா ஒதுக்கீடு: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்!
ஒருவேளை… அரசியலுக்கு இடைவேளை விட்ட விஜய்