“கள்ளச்சாராயம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்”: முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி உயிர்களை காப்பாற்றிடும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் மெத்தனால் எரிசாராயம் பயன்படுத்தியதால் இந்த துயரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கரணை கிராமத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மெத்தனால் பயன்படுத்தியதாகவும் டாஸ்மாக் நிறுவனத்தின் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமின்றி இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதுதவிர தொழிற்சாலையில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும்பொருட்டு இப்பிரச்சனை மூலக்காரணத்தை கண்டுபிடித்து ஒழித்திட ஏதுவாக இந்த இரண்டு சம்வம் குறித்த விசாரணைகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும்.

கள்ளச்சாராயம் விற்பனை தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

செல்வம்

பத்தாம் வகுப்பு ரிசல்ட் எப்போது?

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *