திமுக ஆட்சிக்கு கெடுதல் செய்து ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று சிலர் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 7) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “எந்த இலட்சியத்திற்காக அறிஞர் அண்ணா, கலைஞர் பாடுபட்டார்களோ அந்த இலட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நம்முடைய கடமையை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தலைவர்களும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக்கொண்டிருக்கக்கூடிய சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்காவது ஜாதி கலவரம் அல்லது மத கலவரங்களை தூண்டலாமா மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என்று திட்டமிட்டு வருகிறார்கள்.
நம் மீது சொல்லப்படுகிற தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் அதிகம் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை சொல்லி நான் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமோ அவர்களை வைத்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
விரைவில் நாம் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மார்ச் 1-ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியது போல நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதை செய்தால் தான் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதையும் நாம் காப்பாற்ற முடியும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
ஹேப்பி நியூஸ் மக்களே…குறைந்தது தங்கம் விலை!
கோவை: ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு!