பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெர்வித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, “அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த ஏப்ரல் மூன்றாம் நாள் நடைபெற்ற முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன்.
- சமூக நீதி – Social Justice
- மதசார்பற்ற அரசியல் – Secular Politics
- சமதர்மம் – Socialism
- சமத்துவம் – Equality
- மாநில சுயாட்சி – State Autonomy
- கூட்டாட்சிக் கருத்தியல் – Federalism
இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிகமிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு.
திமுகவை பொறுத்தவரையில், சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான்.
தொடர்ச்சியாக, சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன. இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது.
சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் மத்திய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.
திடீரென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டியது, பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த போது, இதே ஆர்.எஸ்.எஸ் எங்கே போயிருந்தது? அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்.தானே? எனவே, நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் விளிம்பு நிலை மக்களை ஏமாற்றுவதற்கு இப்போது மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர, உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக அவர் சொல்லவில்லை.
பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏன், மத்திய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் சமூகநீதி அடிப்படையில் அவர்கள் நிரப்ப வேண்டும்.அதனைச் செய்வார்களா?
சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினையாகும். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்சினை.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது.
அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறு விழுக்காடாக இருந்தாலும், பிரச்சினை ஒன்றுதான். அதுதான் புறக்கணிப்பு.
எங்கெல்லாம் புறக்கணிப்பு ஒதுக்குதல் தீண்டாமை அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
- பட்டியலின – பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
- பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.
- இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.
- திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது, சமூகநீதி ஆணையத்தை அமைத்தது,சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது.
இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். வழிகாட்டும். செயல்படுத்தும்.
இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் இந்தக் குழு நிச்சயம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில் அட்டவணை சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓபிசிக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குவதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
- பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு நிர்ணயம் ஆகியவற்றில் OBC-களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- 2015-இல் சேகரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்புத் தரவை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
- SC/ST/OBC-களுக்கான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடுகளை ஆராய வேண்டும்.
- அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் தரப்படும் இடஒதுக்கீட்டை தனியார் வேலைவாய்ப்புக்களிலும் பின்பற்ற வேண்டும்.
- மத்திய பல்கலைக்கழகங்கள், IITகள், IIMகளில் OBC, SC & ST சமூகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களை விகிதாசார முறையில் நியமனம் செய்ய வேண்டும்.
- I.I.T, I.I.M மற்றும் I.I.S.C போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைகளில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு விகிதாசாரப்படி உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- SC/ST/OBC ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சமூகநீதிக் குழு இருக்க வேண்டும்.
- 50 விழுக்காடு என்றுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ளது போல், மத்திய அளவில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட, அகில இந்திய அளவில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
– இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
அதிலும் குறிப்பாக, மிக முக்கியமாக, இடஒதுக்கீடு வழங்குதல் என்பது மாநில அரசுகளின் கையில்தான் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல.
“இடஒதுக்கீடு” மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.
இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட “சமூகநீதி” தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் பச்சைப்பயறு
செங்கல்பட்டு என்கவுண்டர்: சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!