எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சென்னை மாநகரத்தில் வழக்கமாக எந்தெந்த பகுதிகளிலெல்லாம் தண்ணீர் தேங்குமோ, தற்போது அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குவதில்லை. மழை பெய்யும் போது ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. அந்த பகுதிகளில் மழை நின்றதும் 10 முதல் 15 நிமிடங்களில் தண்ணீர் முழுமையாக வற்றி விடுகிறது.
கொளத்தூர் தொகுதியில் மழை, வெள்ளம் என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் வந்துவிடுவேன். நான் மட்டுமல்ல, அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் அடிக்கடி வருகிறார்கள். அதனால், இங்குள்ள மக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல்கிறார்கள். அதனை நான் தீர்த்து வைக்கிறேன்.
வானிலையைப் பொறுத்தவரை ஓரளவுக்கு தான் கணிக்க முடியும். முழுமையாக கணிக்க முடியாது. அதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். வானிலை அறிக்கையின் அடிப்படையில் தான் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக ஓரளவுக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அதையும் மீறி சில நேரத்தில் அதிகமாக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குகிறது. அதனையும் சரி செய்ய நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
திண்டிவனம், விழுப்புரம், மயிலம், மரக்காணம் பகுதியில் நாங்கள் எதிர்பார்க்காத அளவை விட 60 செ.மீ வரை மழை பெய்துள்ளது. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய துணை முதல்வர் உதயநிதி அந்த பகுதிகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார். ஏற்கனவே மாவட்ட அமைச்சர் பொன்முடி வெள்ள நீர் சேதங்களை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளையும் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்..
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாகி விட்டது.
அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் தேவையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை ஓட்டு போட்டவர்கள் மட்டுமில்லாமல் ஓட்டு போடாதவர்களுக்காகவும் சேர்த்து தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது?- Public Review
20 ஆண்டுகளில் இல்லாத மழை… புதுவையை புரட்டிப் போட்ட ‘ஃபெஞ்சல்’ புயல்!