2026 சட்டமன்ற தேர்தலில் இதுவரை எந்த ஒரு கட்சியும் பெறாத அளவிற்கு நாம் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 17) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று திமுகவின் பவளவிழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசியபோது, “கட்சி தொண்டர்கள் இல்லாமல் திமுகவும் இல்லை நானும் இல்லை. அந்த நன்றி உணர்ச்சியோடு தான் உங்கள் முன்னால் நான் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறேன்.
14 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னைக்கு திரும்பினேன். பல்லாயிரம் கோடி முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது. அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
அதேபோல எனக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு என்பது, இந்தியாவில் மற்ற மாநில மக்களும் சோஷியல் மீடியாவில் புகழ்ந்து பேசும் அளவுக்கு ரீச் ஆனது. அதற்கு காரணம், என்றைக்கும் நாம் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.
1966-ஆம் ஆண்டு என்னுடைய 13 வயதில் இளைஞர் திமுகவை தொடங்கி, 53 ஆண்டுகள் இயக்கத்திற்கும் தமிழகத்திற்கும் உழைத்ததனால் தான் இன்றைக்கு திமுகவின் தலைவராக இருக்கிறேன். கருப்பு சிவப்பு கொடியும் திமுக தொண்டர்களின் அரவணைப்பும் கலைஞரின் வழிகாட்டுதலும் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
திமுகவின் தலைவர் என்ற தகுதியை வழங்கியது கட்சி தொண்டர்கள் தான். முதல்வர் தகுதியை வழங்கியது தமிழக மக்கள். திமுகவும் தமிழ்நாடும் என்னுடைய இரு கண்கள் என்று நான் செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் திமுகவின் பவள விழாவை கொண்டாடுவது எனக்கு கிடைத்திருக்கும் பெருமையாக நான் கருதுகிறேன்.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை நாம் திராவிட மாதமாக கொண்டாடி வருகிறோம். ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்து கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல. இதற்கு முழுமுதற் காரணம், நமது அமைப்பு தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன்.
1977-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியுற்ற போது, இதோடு திமுக முடிந்துவிட்டது என்று சில ஊடகங்கள் எழுதினார்கள். அப்போது, ‘கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும் திமுகவின் வாழ்வு முடியாது’ என்று கலைஞர் சொன்னார்.
லட்சம் கிளைக்கழகங்களை கொண்டது நமது தலைமை கழகம். இன்றைக்கு நாங்கள் கம்பீரமாக தலைமை கழகத்தில் உட்கார்ந்திருக்கிறோம் என்றால், அதற்கு அடித்தளம் கிளை கழகம் தான். அடிக்கட்டுமானம் உறுதியாக இருந்தால் தான், மேல்கட்டுமானமும் வலிமையாக இருக்கும்.
அந்த அடிக்கட்டுமானத்தை அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் இன்னும் எத்தனையோ தலைவர்களும் உருவாக்கி கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்.
தலைவர் – தொண்டன் இல்லாமல் அண்ணன், தம்பி என்ற பாச உணர்வோடு திமுக கட்டமைக்கப்பட்டது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் உடன்பிறப்பு என்ற பாச உணர்வோடு கட்டமைக்கப்படவில்லை. அந்த பாச உணர்வு தான் நம்மை இயக்குகிறது.
முதல்முறையாக அண்ணா ஆட்சியை கைப்பற்றினார். அவரை தொடர்ந்து நான்கு முறை கலைஞர் முதல்வராக இருந்தார். ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்றக்கூடிய கடமை என் தோளில் விழுந்தது.
லட்க்கணக்கான திமுக தொண்டர்களின் உதவியுடன், பெரும்பான்மையான தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.
இந்த தருணத்தில் முக்கியமான செய்தியை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெள்ளி விழா, பொன் விழா கொண்டாடியபோது திமுக ஆட்சியில் இருந்தது. பவள விழா கொண்டாடும்போதும் திமுக ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும்போதும் திமுக தான் ஆட்சியில் இருக்கும்.
அண்ணாவும், கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கை என்பது நம்முடைய உயிர்நாடிக்கொள்கை. நாம் கோட்டையில் இருந்தாலும் அங்கே இருக்கக்கூடிய புல்லை வெட்டக்கூட நமக்கு உரிமை இல்லை. அதற்கு மேலே அனுமதி வாங்க வேண்டும் என்று கலைஞர் எளிமையாக சொன்னார். இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி போடுறீங்கன்னு கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.
இந்த சூழலில், மாநில சுயாட்சியை வென்றடுப்பதற்கான அறிவிப்பு தான் இந்த பவளவிழா செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய அடுத்த இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல். இதுவரை இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என்று வரலாறு சொல்ல வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முப்பெரும் விழா… விருதுகள் வழங்கி கெளரவித்த ஸ்டாலின்
உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி!