ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 17) ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மீண்டும் வரலாற்று கடமையாற்ற காலம் நம்மை அழைக்கிறது.
திமுக தேர்தல் பொறுப்பாளர் என்று கம்பீரமாக கடமையாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது தான் உங்களுடைய முதல் பணி. வாக்காளர்களை சந்தித்து அரசின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும்.
வாக்காளர் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் 1 மணி நேரத்தை கழகத்திற்காக ஒதுக்குங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அதை நிறைவேற்றாதவர்கள் மீது வரும் காலங்களில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். ஒரு நாளைக்கு 10 வீடுகளுக்கு சென்று பேசுங்கள்.
நமக்கு எதிராக பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப ஒரு சிறு நரிக்கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிக குறைவு.
நாம் நமது திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களின் பரப்புரை சுக்குறாகிவிடும்.
அதிமுக, பாஜக எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் செய்தது போல விளம்பரம் செய்து கொள்வார்கள். நாம் நம்முடைய திட்டங்களை மட்டும் சொன்னால் போதும்.
இந்தியா முழுவதும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்கிறேன், அதுவும் ராமநாதபுரத்தில் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். ராமநாதபுரத்தில் மோடியை போட்டியிட சில பேர் அழைப்பதாக ஊடகத்தில் செய்தி வருகிறது.
இதே ராமநாதபுரத்தில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி பேசும்போது மிகப்பெரிய புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் உலக சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினாரா? அம்ரு திட்டம், சுதேசி திட்டம் என்று சில கோடி ரூபாய்களை ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டமாக செய்திருக்கிறார்கள்.
கடந்த 2019 மார்ச் 1-ஆம் தேதி தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையே 17 கி.மீ புதிய ரயில் பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு மோடி சுட்ட பல வடைகளில் இதுவும் ஒன்று.
தேர்தல் முடிந்தவுடன் ஊசி போயிற்று. 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று மோடி சபதம் ஏற்றார். மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவனைக்கு இப்போது தான் டெண்டர் விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் கேட்பதால் திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
ஜார்கண்ட் ஆளுநரை சந்தித்தார் ரஜினிகாந்த்
“பிரதமர் வீடு முன்பு தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும்” – செல்லூர் ராஜூ