mk stalin says manipur violence

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “பிரிவினையை திமுக தூண்டுவதாக பாஜக திசை திருப்புகிறார்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘ஒரு காலத்தில் நாம் திராவிட நாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அது இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்கான பேச்சே தவிர இதில் பிரிவினை எங்கே இருக்கிறது. இதை வெட்டி ஒட்டி வாட்ஸப்பில் ஒரு குரூப் அனுப்ப, அதை நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் பேசுகிறார்கள்.

ராஜாஜியும், எம்ஜிஆரும், காமராஜரும், அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று பிரதமர் மோடி கேட்கிறார். திராவிட நாடு கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர் தான் புரட்சி நடிகர் எம்ஜிஆர். அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று பாடிக்கொண்டிருந்தவர் தான் எம்ஜிஆர். இதையெல்லாம் பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கட்சிக்காரர்கள் வாட்ஸப் யுனிவர்சிட்டியில் வருவதை வரலாறு என்று நம்புவது பிரதமர் பதவிக்கு அழகல்ல. வகுப்புவாதத்தை ஏற்காதவர் காமராஜர். டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை கொளுத்த முயன்றது யார் என்று தெரிந்து கொண்டு காமராஜர் பெயரை உச்சரிக்க வேண்டும்.

சொந்த கட்சியில் இருக்கக்கூடியவர்களுக்குச் சொல்லக்கூடிய  அளவுக்குஅவர்களிடம் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தான் மாற்று கட்சி தலைவர்களை கடன் வாங்கி திமுகவை விமர்சித்திருக்கிறார். கனிமொழி சொன்னதால் சிலப்பதிகாரம் முன்னுரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு நேரம் கிடைக்கும் போது சிலப்பதிகாரத்தை முழுமையாக படிக்க வேண்டும். நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகர் எழுதிய The Crooked Timber of New India புத்தகத்தை மத்திய அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும் என்று அந்த புத்தகத்தில் கூறுகிறார். என்னை இந்தி, சமஸ்கிருதம் படிக்க விடவில்லை என்று கதை விடுகிறார்.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் அரங்கேற்றிய நாடகத்திற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிற நிர்மலா சீதாராமனுக்கு மணிப்பூரில் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்து வரப்பட்ட பெண்களை பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை. ஒன்றரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு மணிப்பூர் என்ற மாநிலம் நினைவுக்கு வரவில்லை. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் ஒரு சில நிமிடங்கள் மணிப்பூர் குறித்து பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் விவகாரம் நிச்சயம் எதிரொலிக்கும். வடக்கை தான் அவர்கள் அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது வட மாநிலங்களையும் இழக்க தொடங்கிவிட்டார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் திமுக சரியாக இருக்கிறது என்று பொருள். தமிழ்நாட்டில் பாஜகவின் பாதம் தாங்கியாக பழனிசாமி இருக்கிறார். அதிமுக பாஜகவின் அடிமை.

திமுக எதிர்ப்பு மட்டும் தான் அதிமுகவிற்கு தெரியும். அவர்களுக்கு எந்த தியாக வரலாறும் கொள்கையோ கிடையாது. அதனால் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக, பாஜகவிற்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல திமுக. நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களுக்காக குரல் கொடுக்கிற கட்சி திமுக. நம்முடைய கொள்கை இந்திய ஆட்சியை வழிநடத்துகிற கொள்கையாக மாற வேண்டும். அதற்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். இந்தியாவை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான். பாஜக தங்களை எதிர்ப்பவர்களை ஆண்டி இந்தியன்ஸ் என்று பழி சுமத்துவது வழக்கம். இப்போது இந்தியாவை எதிர்க்கும் ஆண்டி இந்தியன்ஸாக பாஜகவினர் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

அர்ஜுன் 40: தொடங்கி வைத்த ‘நன்றி’!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றினாரா? – ஸ்டாலின் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *