பிரதமர் மோடியால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 9) நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் சிற்றரசு, எழிலரசி ஆகியோர் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகிறோம். காலை உணவு திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரில் மகளிர் உரிமைத்தொகை 1 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. இது சிலருக்கு எரிச்சலை தந்துள்ளது. அதனால் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இந்தியாவுக்கே பேராபத்து வந்திருக்கிறது. பேராபத்திலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாஜக 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா? கருப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ரூ.15 ரூபாயாவது அவர் வழங்கியிருக்கிறாரா. மாதம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்ற வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டார்.
மோசமான சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பீகாரில் கூட்டம் நடத்தப்பட்டது. ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த பிரதமர் மோடி ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார். இதனால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதை பற்றி இம்மி அளவும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற முழுமையாக ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்