கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ராவின் கீழ் இயங்கும் ருக்மணி தேவி நுண்கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடி வருவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வபெருந்தகை ஆகியோர் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய கலாஷேத்ரா விவகாரத்தை பொறுத்தவரையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மாணவிகள் பாலியல் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்ககோரி டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு 21.3.2023 அன்று கடிதம் எழுதியது.
இதுதொடர்பாக கலாஷேத்ரா இயக்குனர் நமது மாநில காவல்துறை தலைவரை சந்தித்து தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
பிறகு தேசிய மகளிர் ஆணையமே நாங்கள் பத்திரிகை செய்தி அடிப்படையில் விசாரித்தோம்.
அந்த விசாரணையை முடித்து வைத்துவிட்டோம் என 25.03.2023 அன்று டிஜிபிக்கு கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர் கடந்த 29.03.2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் பயிலும் 210 மாணவிகளிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்போது காவல்துறை தங்களுடன் வர தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பிற்கு எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்தநிலையில் மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக கலாஷேத்ராவில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் மாவட்ட ஆட்சி தலைவரை தொடர்புகொண்டு விவரங்களை அறிந்தேன்.
இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிவதற்காக வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.
இன்று காலையில் வருவாய் துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரோடு பேசி வருகிறார்கள்.
மேலும் அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அங்கு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அரசை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஏப்ரல் 3-க்கு ஒத்திவைப்பு!