தமிழ்நாடு – ஜப்பான் தொடர்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்

அரசியல்

தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையே நிறைய தொடர்பு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில்‌ நடைபெற்ற ஜப்பான்‌ வாழ்‌ தமிழர்களின்‌ வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று‌ (மே 28) கலந்து கொண்டார்.

சென்னையில்‌ 2024 ஜனவரி மாதம்‌ நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள்‌ மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும்‌, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும்‌ நோக்கிலும்‌ முதல்வர் ஸ்டாலின்‌ சிங்கப்பூர்‌ மற்றும்‌ ஜப்பான்‌ நாடுகளுக்கு அரசு முறை பயணம்‌ மேற்கொண்டுள்ளார்‌.

mk stalin says japan tamil connection

சிங்கப்பூர்‌ பயணத்தை முடித்துக்‌ கொண்டு தற்போது ஜப்பானில்‌ முதல்வர் ஸ்டாலின்‌ அரசு முறை பயணம்‌ மேற்கொண்டு வருகிறார்‌.

அதன்‌ தொடர்ச்சியாக இன்று டோக்கியோவில்‌, ஜப்பான்‌ வாழ்‌ தமிழர்கள்‌ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்‌, ஜப்பான்‌ தமிழ்ச்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ தமிழ்‌ பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும்‌ வகையில்‌ நடைபெற்ற தமிழர்‌ தற்காப்புக்‌ கலையான வர்மக்‌ கலை, பரதநாட்டியம்‌, மிருதங்க இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம்‌, மயிலாட்டம்‌, கும்மியாட்டம்‌, தப்பாட்டம்‌ போன்ற நிகழ்ச்சிகளை ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “என்னுடைய நிகழ்ச்சி நிரலில்‌ எப்போதுமே, அரசு நிகழ்ச்சி அல்லது அரசியல்‌ நிகழ்ச்சிகளாக ஓய்வில்லாமல்‌ தொடர்ந்து ஒவ்வொரு நாளும்‌ நான்‌ கலந்து கொண்டு வருகிறேன்‌. ஆனால்‌ அதற்கெல்லாம்‌ மாறாக இங்கு நான்‌ கண்ட கலைநிகழ்ச்சிகளும்‌, நீங்கள்‌ தந்திருக்கக்கூடிய உற்சாக வரவேற்பால் என்னையே நான்‌ மறந்து போய்‌ இருக்கிறேன்‌. மறந்து மட்டுமல்ல, நெகிழ்ந்து போய்‌ இருக்கிறேன்‌. உணர்ச்சியோடு உங்கள்‌ முன்னால்‌ நின்று கொண்டு இருக்கிறேன்‌.

மிக நேர்த்தியாக நம்முடைய கலை நிகழ்ச்சிகளை நடத்திக்‌ காட்டியிருக்கக்கூடிய நம்முடைய மாணவச்‌ செல்வங்கள்‌, நம்முடைய குழந்தைகள்‌, கலையை எந்த அளவிற்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்‌ என்பதை பார்க்கும்போது நான்‌ உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்‌. இந்த கலை நிகழ்ச்சிகளில்‌ பங்கேற்றிருக்கக்கூடிய மாணவச்‌ செல்வங்களுக்கு, குழந்தைகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை இந்த நேரத்தில்‌ நான்‌ தெரிவித்துக்‌ கொள்ள விரும்புகிறேன்‌.

இந்த அரங்கிற்குள்‌ நான்‌ வந்ததிலிருந்து நான்‌ தமிழ்நாட்டில்‌ தான்‌ இருக்கிறேனா என்ற சந்தேகம்‌ என்னுடைய உணர்விலே கலந்திருக்கிறது. அந்த அளவிற்கு உங்களுடைய வரவேற்பும்‌, உங்களுடைய உற்சாகமும்‌ வெளிப்படுத்தக்கூடிய நேரத்தில்‌ நான்‌ அதை உணர்கிறேன்‌.

சூரியன்‌ உதிக்கும்‌ நாடு, ஜப்பான்‌. ஜப்பான்‌ என்றால்‌, உழைப்பு. சுறுசுறுப்பு. உழைப்பாளர்களின்‌ நாடு இது. வீழ்ந்த வேகத்தில்‌ எழுச்சி பெற்ற நாடு இது. இரண்டாம்‌ உலகப்‌ போரின்‌ போது அணுகுண்டுகள்‌ வீசப்பட்டு பெரும்‌ பாதிப்பு ஏற்படுத்தப்பட்டாலும்‌, மிகக்‌ குறுகிய காலத்தில்‌ எழுந்து நின்று, உலகில்‌ தவிர்க்க முடியாத பொருளாதார சக்தி மிகுந்த நாடாக ஆகியிருக்கிறது ஜப்பான்‌.

ஜப்பான்‌ மக்களின்‌ உழைப்பால்தான்‌ இது சாத்தியமானது. ஜப்பான்‌ – தமிழ்‌ இரு மொழிகளுக்கும்‌ நிறைய ஒற்றுமைகள்‌ இருப்பதாக மொழி ஆய்வாளர்கள்‌ சொல்வார்கள்‌. இரண்டும்‌ ஒரே மாதிரியான இலக்கணக்‌ கட்டமைப்பு கொண்டவை என்று சொல்லப்படுகிறது. தமிழர்கள்‌ ஜப்பான்‌ மொழியைப்‌ படிப்பதிலும்‌ ஆர்வம்‌ காட்டுகிறார்கள்‌. ஜப்பானியர்களும்‌ தமிழைக்‌ கற்க முயற்சிக்கிறார்கள்‌.

mk stalin says japan tamil connection

பேராசிரியர்‌ சுசுமு ஓனோ தனது வாழ்க்கையில்‌ 30 ஆண்டுகள்‌ தமிழ்‌ – ஜப்பானிய மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்திருக்கிறார்‌. தமிழ்‌ படிப்பதற்காக தமிழகத்துக்கு வந்த சுசுமு ஓனோ சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்‌ பொற்கோ அவர்களிடம்‌ தமிழ்‌ கற்றார்‌. அமைப்பு ரீதியாகவும்‌, இலக்கண வழியாகவும்‌ இரண்டு மொழிகளுக்கும்‌ ஒற்றுமை இருக்கிறது என்பதை 1970- ஆம்‌ ஆண்டே கண்டுபிடித்து சொன்னவர் அவர்.

இப்படி தமிழ்நாட்டுக்கும்‌ ஜப்பானுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்‌. இத்தகைய பெருமைகளைக்‌ கொண்ட ஜப்பான்‌ நாட்டில்‌ உள்ள தமிழ்ச் சங்கங்களின்‌ சார்பில்‌ நடைபெறக்கூடிய இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொள்வதில்‌ மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்‌.

நம்‌ அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு தமிழைப்‌ படிக்க ஊக்குவிப்பது, ஜப்பானில்‌ உள்ள பள்ளிகளில்‌ தமிழ்‌ நூலகங்கள்‌ அமைக்க உதவி புரிவது, பள்ளிகளுக்கிடையேயான தமிழ்‌ சார்ந்த கலைநிகழ்ச்சிகள்‌ நடத்துவது, போட்டிகள்‌ நடத்துவது, தமிழ்‌ இலக்கியத்தை பரப்புவது,

தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும்‌, தமிழ்‌ எழுதப்‌ படிக்கத்‌ தெரியாத தமிழர்களுக்குத்‌ தமிழைக்‌ கற்றுக்கொடுப்பது, தமிழ்‌ எழுத்தாளர்களை ஊக்குவிப்பது எனப்‌ பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச்‌ செய்து வரும்‌ தமிழ்ச்‌ சங்கத்தினரை நான்‌ மனதார பாராட்டுகிறேன்‌.

தமிழைக்‌ காப்பது தமிழினத்தைக்‌ காப்பது ஆகும்‌. அதைத்‌ தொடர்ச்சியாகச்‌ செய்யுங்கள்‌ அதற்குத்‌ தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசும்‌ – திமுகவும் செய்யும்‌ என உறுதி அளிக்கிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தவில், நாதஸ்வரம், தேவாரம் முழங்க செங்கோல் பொருத்திய மோடி: அந்த 26 நிமிடங்கள்…

சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தப்போவது யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *