திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்று (மே 7) மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை பற்றி நான் இம்மி அளவும் கவலைப்படுவதில்லை. நல்லதை எடுத்துக்கொள்வேன், கெட்டதை புறந்தள்ளி விடுவேன். ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த ஆட்சி என்பது திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கானது மட்டுமல்ல. வாக்களிக்காதவர்களுக்கும் தான் என்று நான் கூறினேன்.

ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இதுபோன்ற ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என்று வருத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று கூறினேன். அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்