மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களும் பேசினர். எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “மக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆரம்பத்தில் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரும்போதே இந்த விவரத்தை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், ஏலத்தை தடுத்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். அவர்கள் பார்வையில் நாங்கள் அலட்சியமாக செயல்பட்டதாக இருக்கலாம்.
ஆனால், எங்களுடைய பார்வையில் நாங்கள் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படவில்லை. அடிக்கடி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம்.
அதனால் தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் வர வாய்ப்பே இல்லை. நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம்.
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன். எனவே, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை அதிமுகவும் ஆதரவு அளித்து ஏகமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…