“கலைஞரால் பட்டைத் தீட்டப்பட்டவர் பொன்முடி” – புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பாராட்டு!

Published On:

| By Selvam

திமுக துணை பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி எழுதிய  ‘The Dravidian Movement and the Black Movement’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்க நூலான ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் இந்த புத்தகத்தை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “திமுக என்பது ஒரு அறிவு இயக்கம் என்பதன் அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி. திமுகவை சேர்ந்தவர்கள் சிந்தனை தெளிவு கொண்ட அறிவாளிகள் என்பதன் அடையாளம் பொன்முடி. அப்படிப்பட்டவர் திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு நூலை நமக்கு தந்திருக்கிறார்.

திமுக பொதுக்கூட்டங்கள் மாலை நேரக்கல்லூரிகள் என்று அண்ணா சொன்னார். அப்படிப்பட்ட மாலை நேர கல்லூரியாக, திராவிட வகுப்பாக இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கக்கூடிய பொன்முடிக்கு எனது வாழ்த்துக்கள்.

பேராசிரியர் தெய்வசிகாமணியை பொன்முடியாக ஆக்கியவர் கலைஞர். கலைஞரால் பட்டைத் தீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால் தான் தன்னுடைய செயல்பாடுகளால் மின்னுகிறார். பொன்முடி பற்றி கலைஞர் பஞ்ச் லைனில் சொல்ல வேண்டும் என்றால், ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி. அறிவுமுடி தான் பொன்முடி. இதைவிட சிறந்த பாராட்டு அவருக்கு தேவையா?

திராவிட இயக்கத் தீரர்களை தந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புராடக்ட் அவர். பி.ஹெச்டி பட்டம் பெற்று முனைவர் ஆனவர். கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த மாதிரி, சமூகத்தைப் பண்படுத்த  திராவிடர் கழகம் மூலமாக வகுப்பெடுப்பார். அந்த காலக்கட்டத்தில் திருச்சி செல்வேந்திரேன், பொன்முடி, சபாபதி மோகன் இந்த மூவர் அணி முழங்காத மேடையே இல்லை. இவர்கள் குரல் கேட்காத ஊரும் அல்ல.

இப்படி ஒரு கொள்கை வீரர் அல்லும் பகலும் உழைத்தால் அவருக்கு கலைஞரின் அங்கீகாரம் கிடைக்காமல் போகுமா? 1989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதுவரை 8 தேர்தலில் போட்டியிட்டு, அதில் 6 முறை வென்று நான்காவது முறையாக அமைச்சராக மக்கள் பணியாற்றுகிறார்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு என்றால் அது 2003-ஆம் ஆண்டு மாநாடு தான். எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்த பொன்முடிக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாநாட்டுக்காக கலைஞர் எழுதிய கடிதத்தின் தலைப்பு, ‘பொன்முடி அழைக்கிறார் புறப்பட்டு வருக’. அப்படிப்பட்ட பொன்முடி, திராவிடர் இயக்கத்திற்கு கொடையாக உருவாக்கி தந்திருக்கிற பொன்னேடு தான் திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும் என்ற வரலாற்று நூல்.

இந்த நூலின் ஆங்கில பதிப்பை 1998-ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் வெளியிட முரசொலி மாறன் பெற்றுக்கொண்டார். இன்றைக்கு அதன் தமிழாக்கத்தை கலைஞர் அரங்கத்தில் வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இதை விட எனக்கு என்ன பாக்கியம் கிடைக்க போகிறது?

27 ஆண்டுகள் தாமதமாக தமிழாக்கம் வருகிறதே என்ற கவலை இருந்தாலும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், ஆதிக்க சக்திகளுக்கு நம்மை பிடிக்கவில்லை. அதனை ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. அதை இன்றைக்கு கூட கண்கூடாக பார்க்கிறோமே.

சட்டமன்றத்தில் திராவிட மாடல் என்று எழுதிக்கொடுத்தால் ஆளுநர் பேசமாட்டார். இந்தி மாத விழா நடத்தக்கூடாது என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள்.

ஏன் திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு வாயும் வயிறும் மூளையும் கொஞ்சம் எரியும் என்றால் திரும்ப திரும்ப பாடுவோம். திராவிடம் என்பது ஒருகாலத்தில் இடப்பெயராகவும், மொழிப்பெயராகவும், இனப்பெயராக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது அரசியல் பெயராக ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சி பெயராக உருவெடுத்திருக்கிறது. திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, ஆரியத்தை பதம் பார்க்கிற சொல்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? – அப்டேட் குமாரு

 தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… உதயநிதி பதவி விலகுவாரா? – எல்.முருகன் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share