தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சித்து விளையாட்டுக்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். எதை வேண்டுமானாலும் அவர் பேசட்டும் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் இன்று (ஜுன் 7) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “கலைஞர் பிறந்தநாளை நன்றியின் அடையாளமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர் சாமானியர்களுக்காக ஆட்சி செய்தார். தோழமை கட்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம்.
எல்லோருக்கும் எல்லாம் வாய்த்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிடத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக போர்க்களமான நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைக்க கூடாது என்று தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக அமைய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய தேர்தல் சடங்கு அல்ல. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக உள்ள ஜனநாயக சக்திகள் இந்தியாவை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்தபோது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வருகிற ஜூன் 23-ஆம் தேதி பீகாரில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மதவாத, பாசிசவாத, எதேச்சதிகார பாஜகவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்றிணைய வேண்டுமே தவிர தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட கூடாது.
பிரிவினைகளால் பாஜக வெல்ல பார்க்கும். அதற்கு அகில இந்திய தலைவர்கள், முதல்வர்கள் இரையாகி விடக்கூடாது. எத்தகைய பொய் சொல்வதற்கும் பாஜகவினர் தயங்க மாட்டார்கள்.
அவதூறுகளை அள்ளி வீசவும் அதனை பரப்பவும் பாஜகவின் ஏவலுக்கு கீழ்படியும் சிந்தனையற்ற பொறுப்புணர்ச்சியால் மழுங்கடிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடியவர் செய்து கொண்டிருக்கக்கூடிய சித்து விளையாட்டுக்களை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியோடு நாங்கள் கிளம்பியிருக்கிறோம். எதை வேண்டுமானாலும் அவர் பேசட்டும் கவலையில்லை, மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தோடு இந்திய ஜனநாயக திருவிழாவையும் நாம் கொண்டாடக்கூடிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நமக்காக அல்ல, நாட்டிற்காக. நடைபெற இருக்கக்கூடிய தேர்தலை மனதில் வைத்து வெற்றி பெற உறுதியேற்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
”கார் போகாதா? எடுய்யா டூ வீலரை” வாழைத் தோட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.
டிஜிட்டல் திண்ணை: மாணவர்கள் வழியாக மாண்புமிகு! 2031 ஐ நோக்கி விஜய்யின் வேட்டை திட்டம்!
