ஆளுநர் ரவியின் பேச்சு திராவிட கொள்கைக்கு விளம்பரம் தேடித்தருவதாக அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “புலவர் நன்னன் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக நேர்மையானவராக விளங்கியவர். பெரியார், கலைஞரை போல நன்னன் 90-ஆண்டுகளை கடந்து வாழ்ந்தவர். வாழ்நாளெல்லாம் நாட்டுக்காக மொழிக்காக ஓயாது உழைத்தார். நன்னன் எழுதிக்கொண்டே இருந்தார். பல்லாயிரம் பக்கங்களை எழுதிக்குழுவித்த நன்னன் விரலுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தேன். அதனை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக்கொண்டிருக்கிறேன்.
வாரத்திற்கு இரண்டு முறை என்னை தொடர்பு கொண்டு பேசுவார். அப்போது எனக்கு பல நேரங்களில் அறிவுறை கூறுவார். ஒரு வாரம் அவரிடமிருந்து எனக்கு போன் வரவில்லை. உடல்நிலை சரியில்லை என்று நினைத்து அவரை நேரில் சென்று சந்தித்தேன். அபோது உடல்நிலை சரியில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அவருக்கு முரசொலி பொங்கல் மலர் வெளியீடு கொடுத்தேன். அவர் எனக்கு பெரியார் கணினி புத்தகத்தை கொடுத்தார்.
2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவாலயத்திற்கு வந்தார். அனைவரையும் பார்த்து விட்டு செல்ல வந்தேன் என்று கூறினார். நவம்பர் 7-ஆம் நாள் நன்னன் மறைந்தார். எழுத்தால், சிந்தனையால், செயலால் தொடர்ந்து அவர் வாழ்கிறார், வாழ்வார்.
திமுக பொதுக்குழு, செயற்குழுவில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் கலைஞர் அவரது பேச்சை உற்று கவனிப்பார். அவரது பேச்சு திராவிட இயக்க வகுப்பு நடத்துவது போல இருக்கும்.
இந்தியாவை கபளீகரம் செய்ய சனாதன வருணாசிரம சக்திகள் துடித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் பெரியாரின் எழுத்துக்களை 23 மொழிகளில் கொண்டு வர நாம் முன்னெடுப்புகள் செய்து வருகிறோம். தமிழ்நாட்டிற்கு பெரியார் இருந்ததை போல மற்ற மாநிலங்களுக்கு இல்லை.
பெரியார் இல்லாத ஏக்கம் மற்றம் மாநிலங்களுக்கும் வந்துள்ளது. சனாதான வருணாசிரமம் குறித்து நமது ஆளுநர் தினமும் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரச்சாரமாக அமைந்துள்ளது. தொடர்ந்து ஆளுநராக ரவி இருக்க வேண்டும். அப்போது தான் நமது கொள்கையை நாம் வளர்க்க முடியும். அவரது பேச்சு நமது கொள்கைக்கு விளம்பரத்தை கொடுத்து வருகிறது. எதிரிகள் தான் என்னை உற்சாகமாக வைத்துள்ளார்கள் என்று தந்தை பெரியார் சொன்னார். அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்வதற்கு நன்னனுடைய எழுத்துக்கள் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் நன்னன் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“மத்திய அரசுக்கு மணிப்பூர் மக்கள் மீது அக்கறை இல்லை” – கனிமொழி
உரிமை தொகை: பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்பு முகாம்!