“அரசின் சேவைகள் மக்களை சென்றடையவில்லை” : ஸ்டாலின்

அரசியல்

மக்களுக்கான அரசின் சேவைகள் முழுமையாக சென்றடையவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல்வரின் முகவரி துறையின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களையும்‌ பெரிய பல திட்டங்களையும்‌ நீண்ட கால தொலைநோக்கோடு செயல்படுத்தி வந்தாலும்‌, மக்களின்‌ அன்றாட தேவைகளை அவர்களது கோரிக்கைகளை நாம்‌ நிறைவேற்ற வேண்டியது மிகவும்‌ முக்கியமானதாகும்‌.

அரசின்‌ சேவைகள்‌ குறிப்பிட்ட காலத்திற்குள்‌ அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு துறையின்‌ பொறுப்பாகும்‌. பல்வேறு துறை அலுவலர்கள்‌ மாவட்ட அளவிலும்‌ மாநில அளவிலும்‌ பெறப்படும்‌ கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து உரிய தீர்வுகளை கண்டு பொதுமக்களுக்கு அதன்‌ விபரத்தை தெரிவிக்காத காரணத்தினாலேயே தான்‌ மக்கள்‌ முதலமைச்சரின்‌ முகவரி துறைக்கு மனுக்களை அனுப்புகிறார்கள்‌.

mk stalin says government benefits not reached people

இதன்‌ காரணமாகத்தான்‌ இன்று குறிப்பாக காவல்துறை மற்றும்‌ வருவாய்த்துறை ஆகிய இரு துறைகளும்‌ ஆய்வுக்கு எடுத்துக்‌ கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரு துறைகளிலும்‌ மனுக்கள்‌ அதிக எண்ணிக்கையில்‌ பெறப்படுகிறது. காரணம்‌, மக்களுக்கு அதிக அளவில்‌ இத்துறைகளின்‌ சேவை தேவைப்படுகிறது. ஆனால்‌ அவை அவர்களை முழுமையாக அடையவில்லை என்பதுதான்‌ முக்கிய காரணம்‌.

அரசின்‌. சேவைகள்‌, சான்றிதழ்கள்‌ போன்றவை கூடுமானவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன்‌ மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌ என்று வருவாய்‌ துறையை கேட்டுக்கொள்கிறேன்‌. தற்போது ஆன்லைன்‌ முறை இருப்பதாக கூறப்பட்டாலும்‌ நடைமுறையில்‌ பார்க்கும்‌ போது அதில்‌ பல சிக்கல்கள்‌ உள்ளதாக அறிகிறேன்‌. அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்‌.

விரைவான தீர்வு மட்டுமல்லாமல்‌ சரியான வகையில்‌ தீர்வு செய்வதை உறுதிபடுத்த துறைத்தலைவர்கள்‌, மாவட்ட ஆட்சியர்‌ உள்ளிட்ட அதிகாரிகள்‌ வாரந்தோறும்‌ கட்டாயம்‌ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுதாரரிடம்‌ தொடர்பு கொண்டு மனுவின்‌ தீர்வு முறையை அறிந்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

மக்களுக்கு சேவைகளை வழங்கும்‌ அரசு அலுவலகங்கள்‌ எல்லாம்‌ மக்கள்‌ எளிதில்‌ அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும்‌. தாமதங்களும்‌ வீண்‌ அலைக்கழிப்புகளும்‌ கட்டாயம்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌. மக்களும்‌ அவர்கள்‌ அளிக்கும்‌ மனுக்களும்‌ அலுவலகங்களில்‌ மதிக்கப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால்‌ தான்‌ அரசு தன்‌ கடமையை, பணியை முறையாக ஆற்றுவதாக கருதப்படும்‌.

காவல்துறையைப்‌ பொறுத்தவரையில்‌, பொதுவாக மனுக்களை ஆய்வு செய்ததில்‌ பண மோசடி, குடும்ப பிரச்சனை, வாடகைதாரர்‌ பிரச்சனை மற்றும்‌ நில பிரச்சனை போன்றவையே அதிகம்‌ இடம்பெற்றுள்ளன.

மாவட்டங்களில்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்கள்‌ முதலமைச்சர்‌ தனிப்பிரிவின்‌ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும்‌ மனுக்கள்‌ விபரங்கள்‌ அமைச்சு பணியாளர்கள்‌ அல்லது பிரிவு காவலர்களால்‌ கையாளப்படுவதாகவே தெரிகிறது. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்‌.

உள்ளூர்‌ காவல்‌ நிலையங்களில்‌ முறையான விசாரணை மேற்கொள்ளப்படாததாலேயே மக்கள்‌ முதலமைச்சரின்‌ தனிப்பிரிவை நாடி வருகின்றனர்‌. பொதுமக்கள்‌ உள்ளூர்‌ காவல்‌ நிலையங்களை அணுகும்போதே முறையாக மனு ரசீது கொடுக்கப்பட்டு விசாரணையில்‌ முகாந்தரம்‌ இருப்பின்‌ முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவு செய்தும்‌ முகாந்திரம்‌ இல்லையெனில்‌ அவ்விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுமேயானால்‌ அவர்கள்‌ உயர்‌ அதிகாரிகளையும்‌ முதல்வரின்‌ மனுக்கள்‌ பிரிவையும்‌ நாட வேண்டிய அவசியம்‌ இருக்காது.

நீதிமன்றம்‌ மூலம்‌ மட்டுமே தீர்வு காண முடியும்‌ என்ற பிரச்சனைகளுக்கு தக்க எழுத்துபூர்வமான அறிவுரையுடன்‌ நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்த வேண்டும்‌.

சில காவல்‌ அதிகாரிகள்‌ குறிப்பிட்ட இடைவெளியில்‌ முதல்வர்‌ மனுக்கள் மேளா வைப்பதையும்‌ கீழ்மட்ட விசாரணையில்‌ திருப்தியில்லாதவர்கள்‌ மனுக்கள்‌ மாவட்ட அல்லது நகர காவல்‌ அதிகாரிகளால்‌ நேரடியாக விசாரணை செய்யப்பட்டு தீர்வு காண்பதை அறிகிறேன்‌. இதே நடைமுறையை மற்ற அதிகாரிகளும்‌ பின்பற்றி நடைமுறைபடுத்த வேண்டும்‌.

mk stalin says government benefits not reached people

அதிக மனுக்களை முடிவு செய்வது அல்ல நம்‌ நோக்கம்‌. நியாயமான தீர்வுகளும்‌ மக்கள்‌ திருப்தியுமே இவ்வரசின்‌ குறிக்கோள்‌. இறுதியாக உதவி ஆய்வாளர்‌ மட்டத்தில்‌ செய்யப்படும்‌ முறையான நியாயமான விசாரணை மட்டுமே மக்களுக்கு அசின்‌ மீதான நம்பிக்கையை உறுதிபடுத்தும்‌ என்பதை மனதில்‌ கொண்டு காவல்‌ துறை உயர்‌ அதிகாரிகள்‌ தொடர்‌ ஆய்வுகளை மேற்கொண்டு சார்பு நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

எனவே தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ காவல்‌ துணை தலைவர்‌ தங்களது, மாதாந்திர ஆய்வுக்‌ கூட்டங்களில்‌ முதல்வரின்‌ முகவரி துறை மனுக்கள்‌ முறையாகவும்‌ விரைவாகவும்‌ தீர்வு காணப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

அது மட்டுமல்ல அனைத்து அரசுத்‌ துறை செயலர்களும்‌, துறை, தலைவர்களும்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களும்‌ தங்கள்‌ துறை மற்றும்‌ மாவட்டங்களில்‌ பெறப்படும்‌ மனுக்களை கவனமாக ஆய்வு செய்து முறையாக தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தொடர்ந்து உயரும் தக்காளி விலை: வாங்குவதை நிறுத்தும் மக்கள்!

விலைவாசி உயர்வு: போராட்டத்தை அறிவித்த அதிமுக

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *