mk stalin says fishermen attacked bjp government

“மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது” – ஸ்டாலின்

அரசியல்

பிரதமர் மோடி ஆட்சியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் அதிகரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 18) மீனவர் நல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மீனவர்களுக்கு ஸ்டாலின் அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் மாநாட்டில் ஸ்டாலின் பேசியபோது, “மாநிலத்திற்குள்‌ உள்ள தேவைகளை நாங்கள்‌ நிறைவேற்றுவோம்‌. ஆனால்‌, கடலுக்குள்‌ செல்லும்‌ மீனவர்கள்‌ சந்திக்கின்ற பிரச்சினைகள்‌, இன்னமும்‌ பிரச்சினைகளாவே இருக்கிறது.

தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த மீனவர்கள்‌ இலங்கைக்‌ கடற்படையினரால்‌ தொடர்ந்து தாக்கப்படுவதையும்‌, கைது செய்யப்படுவதையும்‌ இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இருக்கும்‌ தீராத பிரச்சினையாக இது இருக்கிறது.

குறிப்பாக, 2014-ஆம்‌ ஆண்டு ஆட்சி மாற்றம்‌ நடந்து பாஜக ஆட்சி அமைந்ததற்குப்‌ பின்னால்தான்‌ அடக்குமுறைகள்‌ இன்னும்‌ அதிகம்‌ ஆகியிருக்கிறது. கைது, தாக்குதல்‌, சிறைச்சாலைகள்‌ என்பதைத்‌ தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பிலான படகுகளை இலங்கை அரசாங்கம்‌ பறித்துச்‌ செல்வது அதிகமாக இருக்கிறது.

மீனவர்களை விடுவித்தாலும்‌ படகுகள் தருவது இல்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும்‌, வலையும்தான்‌. படகுகளை உடைப்பதும்‌ – வலைகளை அறுப்பதும்‌ இலங்கை அரசாங்கத்திற்கு வழக்கமாக இருக்கிறது. இத்தகைய படகுகள்‌ இலங்கை அரசாங்கத்தின்‌ உடமையாகும்‌’- என்று அந்த நாட்டின்‌ அதிபரே சொல்லும்‌ அளவுக்கு நிலைமை இப்போது மோசமாகயிருக்கிறது.

2014 நாடாளுமன்றத்‌ தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில்‌ பாஜக சார்பில்“கடல்‌ தாமரை’என்ற போராட்டம்‌ நடத்தப்பட்டது. அப்போது, மறைந்த சுஷ்மா சுவராஜ்‌ இங்கே வந்திருந்தார்கள்‌. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால்‌ கச்சத்தீவு மீட்கப்படும்‌. மீனவர்‌ பிரச்னைக்கு நிரந்தரத்‌ தீர்வு காணப்படும்‌ என்று அவர்‌ சொன்னார்‌. இந்த 9 ஆண்டு காலத்தில்‌ இது நடந்திருக்கிறதா?

இதே ராமநாதபுரத்தில்தான்‌ 2014-ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ பிரதமர்‌ நரேந்திரமோடி என்ன பேசினார்‌, “தமிழ்நாட்டு மீனவர்கள்‌ இலங்கைக்‌ கடற்படையால்‌ துன்புறுத்தப்படுவதும்‌ – கைது செய்யப்பட்டு சிறையில்‌ அடைக்கப்படுவதும்‌ தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ்‌ அரசின்‌ பலவீனம்தான்‌ காரணம்‌”-என்று சொன்னார்‌. நாங்கள்‌ கேட்கிறோம்‌, பாஜக ஆட்சியில்‌ இருக்கும்‌ இந்த ஒன்பது ஆண்டு காலத்தில்‌ தமிழ்நாட்டு மீனவர்கள்‌ இலங்கைக்‌ கடற்படையால்‌ தாக்கப்படவே இல்லையா?

மீனவர்கள்‌ பாதுகாப்பாக வாழவேண்டும்‌ என்றால்‌, இந்தியாவில்‌ வலுவான அரசு அமையவேண்டும்‌. மீனவர்கள்‌ வாழ்வு சிறக்க நான்‌ ஒரு சபதம்‌ எடுக்கின்றேன்‌ என்று குமரிக்கு சென்று, 2014 ஆம்‌ ஆண்டு ஏப்ரலில்‌ பேசினார்‌ மோடி‌. அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

“நாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌ ஒரு மீனவர்‌ கூட உயிரிழக்க மாட்டார்‌. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால்‌ பிரச்சினை. குஜராத்‌ மீனவர்களுக்கு பாகிஸ்தானால்‌ பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும்‌ இணைத்துப்‌ பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்‌”- என்றும் மோடி கூறினார்‌.

2014 முதல்‌ தமிழ்நாட்டு மீனவர்கள்‌ மேல்‌ இலங்கைக்‌ கடற்படைதாக்குதல்‌ நடத்தவில்லையா?

2015-ஆம்‌ ஆண்டும்‌ தாக்குதல்‌ நடந்தது. 2016-ஆம்‌ ஆண்டும்‌ தாக்குதல்‌ தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம்‌ மீனவர்‌ பிரிட்டோ கொலை செய்யப்பட்டார்‌. தொடர்ந்து, நம்‌ மீனவர்கள்‌ மீது தாக்குதல்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது.

இன்றும்‌ – இலங்கையை பொருளாதார நெருக்கடியில்‌ இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும்‌ நம்‌ மீனவர்கள்‌ மீதான தாக்குதல்‌ தொடருகிறது. ஒவ்வொரு முறையும்‌ மத்திய அரசுக்கு நான்‌ கடிதம்‌ எழுதிய பிறகுதான்‌ அவர்கள்‌ நடவடிக்கை எடுக்கிறார்கள்‌.

2020-ஆம்‌ ஆண்டு முதல்‌ இன்று வரை பார்க்கிறோம்‌, தமிழ்நாட்டு மீனவர்கள்‌ மேல்‌ இலங்கைக்‌ கடற்படையினர்‌ 48 தாக்குதல்‌ சம்பவங்கள் நடத்தியிருக்கிறார்கள்‌. இதில்‌ தமிழ்நாட்டு மீனவர்கள்‌ 619 பேர்‌ கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்‌. 83 மீன்பிடி படகுகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌, 604 மீனவர்களையும்‌, 16 படகுகளையும்‌ இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில்‌ மட்டும்‌ 74 மீனவர்கள்‌ இலங்கைக்‌ கடற்படை கைது செய்திருக்கிறது. அதில்‌ 59 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌, 67 மீன்பிடி படகுகள்‌ இலங்கையிடம்தான்‌ இன்னமும்‌ இருக்கிறது.

பிரதமர்‌ மோடி ஆட்சியில்‌ தாக்குதல்‌ தொடரவே செய்கிறது என்றால்‌ என்ன அர்த்தம்‌, மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்‌?

மோடி அரசு வந்ததும்‌ தமிழ்நாட்டு மீனவர்களிடம்‌ இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும்‌ நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு. இப்போதும்‌ கைது தொடருகிறது. படகுகளை தர மறுக்கிறார்கள்‌. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்‌? பாஜக அரசுதான்‌. ஒவ்வொரு முறை மீனவர்கள்‌ தாக்கப்படும்போதும்‌ மத்திய அரசின்‌ கவனத்திற்கு நாம்‌ எடுத்துக்காட்டுகிறோம்‌. அவர்களும்‌ இலங்கை அரசுக்கு சொல்லுகிறார்கள்‌. ஆனால்‌, மறுபடியும்‌ கைதும்‌, தாக்குதலும்‌ நடக்கும்‌. இதற்குநிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்‌ என்றால்‌, அதற்கு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும்‌. அதுதான்‌ இந்தப்‌ பிரச்சினைக்கு நிரந்தரத்‌ தீர்வாக இருக்க முடியும்‌.

பிரதமர்‌ நரேந்திர மோடி‌ சென்னைக்கு வரும்போதெல்லாம்‌ அவரிடம்‌ இந்த கோரிக்கையை நான்‌ வைத்திருக்கிறேன்‌. ஏன்‌ கடந்த வாரம்‌ இலங்கை அதிபர்‌ இந்தியாவுக்கு வந்தபோது கூட 19.07.2023 அன்று பிரதமருக்கு இதுதொடர்பாக நான்‌ கடிதம்‌ எழுதியிருந்தேன்‌. ஆனால்‌, இங்கே இருக்கக்கூடிய சிலர்‌ என்ன சொல்கிறார்கள்‌, இதற்கெல்லாம்‌ காரணம்‌ திமுக ஆட்சிக்காலத்தில்தான்‌ கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல்‌ உளறிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌‌ கலைஞர்‌. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக்‌ கூட்டங்கள்‌ தமிழ்நாடு முழுவதும்‌ திமுக சார்பில்‌ நடத்தப்பட்டது.

கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும்‌. எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன்‌ போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில்‌ இறங்க வேண்டும்‌.

ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதாவது தொடங்கிட வேண்டும்‌. பாஜக அரசு இந்த முயற்சியில்‌ இறங்கவில்லை என்றால்‌, அடுத்து நடைபெறும்‌ நாடாளுமன்றத்‌ தேர்தலுக்குப்‌ பிறகு அமைய இருக்கும்‌ புதிய அரசு இதனை நிறைவேற்றும்‌ வகையில்‌ நமது அரசியல்‌ நடவடிக்கைகளை நாம்‌ மேற்கொள்வோம்‌.

கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாட்டு மீனவர்களின்‌ மீன்பிடி உரிமையைக்‌ காப்போம்‌. மீனவர்களின்‌ நலனை காப்பதாக என்றைக்கும்‌ திமுக அரசு இருக்கும்‌” என்று தெரிவித்தார்.

செல்வம்

”மாணவர்களிடையே சாதி வெறுப்பு திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது”: திருமாவளவன்

’என்ன கிண்டல் பண்ணாலும்…’: நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து உதயநிதி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *