அதிமுக தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டிருக்கிறார் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது,
அதிமுக வாக்குசதவிகிதம் குறைவு!
கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுவது போன்று அது இருக்கிறது.

‘காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும்’ பழனிசாமி “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது” என்று உளறி இருக்கிறார். இல்லாததை இருப்பதுபோல் ஊதிப் பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்குக் கைவந்த கலைதான்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியது. இதுவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது.
14 தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அதிமுக நியாயமாகப் பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது.
எளிமையாகச் சொன்னால், 2019-இல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அதிமுக 2024-இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது.
அமித்ஷாவுக்கு எதிராக எடப்பாடி பேசாதது ஏன்?
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது பழனிசாமி தலைமையிலான அதிமுக. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அதிமுககாரர்களே கேட்டு சிரிக்கிறார்கள். பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவைக் கண்டித்தாரா?
அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது.
திமுக என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். எம்ஜிஆர் போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார். பழனிசாமி என்னதான் கத்தினாலும் எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும் குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
துரோகத்தைத் தவிர உங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? திமுகவின் வரலாறு தியாகம். பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம்.
இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி, நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தேர்தலை எதிர்கொள்ள வியூகம்தான் அவசியம்!
நாம் ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்கிற அதேநேரத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது, ஏன் அவர்கள் வரக் கூடாது என்றும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
அதிமுக – பாஜக புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. இது இன்று நேற்றல்ல… 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளும் சவால்.
அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய சொல்லாற்றல் – எழுத்தாற்றல் – மக்கள் நலன் ஆகியவற்றை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்.
நம்மை எதிர்ப்பவர்கள் அனைவருமே நமக்கு எதிரியாக இருக்கத் தகுதியுடையவர்கள் இல்லை. தங்களுக்குக் கவனம் கிடைக்க வேண்டும் என்று ஆர்வக் கோளாறில் நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஆளாகிவிடாதீர்கள்… உண்மையான எதிரிகளை வீழ்த்த உங்கள் ஆற்றலைச் செலவிடுங்கள். தேர்தலை எதிர்கொள்ள வியூகம்தான் அவசியம்.

எனவே, சில அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் இந்தத் தருணத்தில் வழங்க விரும்புகிறேன். மகளிரிடம் நம்முடைய ஆட்சி மேல் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நம்முடைய ஆட்சி மேல் பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதை முழுமையாக நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற வேண்டும். புதிய வாக்காளர்களான இளைஞர்களின் நம்பிக்கையையும் மனதையும் வெல்ல வேண்டும். அதற்கு, அவர்களுக்கான மொழியில் பேச வேண்டும். தொடர்ந்து டிரெண்ட்-இல் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு சிவப்புக்காரர்கள்!
திராவிட இயக்கத்தால் கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது, ஒவ்வொரு குடும்பத்திலும் எப்படிப்பட்ட மாற்றத்தை இது கொண்டு வந்திருக்கிறது என்று இளம் தலைமுறையினரிடம் கொண்டு போக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாற வேண்டும்.
திமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவர் முன்பும் இருக்க அடிப்படைக் கடமை இது.
திமுகவுக்கு பவள விழா கொண்டாடி இருக்கோம். வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா கண்டபோதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்த இயக்கம், நூற்றாண்டு காணும்போதும், ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும், இருக்கும். அதுதான், பெரியார், அண்ணா, கலைஞருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் திமுகவின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும்” என்று தெரித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி உறுதி” : உதயநிதி நம்பிக்கை!
முதலிடத்தில் இந்தியப்படம் : தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்ட ஒபாமா
Comments are closed.