அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டை மனதில் வைத்து திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்து ரூ.1367 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “கலைஞர் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஊர் தான் சேலம். அந்த சேலத்தில் அவரது நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சிலை நிறுவப்படுவது மிக மிக பொருத்தமான ஒன்று. சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அவரது சொந்த மாவட்டமான திருச்சியை விட சேலத்திற்கு தான் அதிக நிதியை ஒதுக்கீடு செய்து மற்ற துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டு காலமாக செயல்படுத்தி வருகிறார்.
திமுக அரசை பொறுத்தவரையில் “சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்”என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். ஆட்சி அமைத்தது முதல் மாவட்டங்கள் தோறும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களையும் திட்டங்களைத் தொடங்கும் விழாக்களையும் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் விழாக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சுற்று நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டது. இப்போது சேலம் தொடங்கி அடுத்த சுற்று நிகழ்ச்சிகளை தொடங்கப் போகிறோம்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் 652 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை. ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குபட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளேன்.
101 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தை 96 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்குப் பேருந்து நிலையமாக மறுசீரமைத்து கலைஞர் நூற்றாண்டு மாநகரப் பேருந்து நிலையம் என இன்றைய நாள் பெயர் சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படும் அரசாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டத்தின் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 கோடி முறை கட்டணமில்லா பேருந்து வசதியை பெண்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தின்படி சேலத்தில் 7 ஆயிரத்து 953 மாணவ மாணவியர் காலை உணவு உண்கிறார்கள். புதுமை பெண் திட்டத்தில் சேலத்தில் 17 ஆயிரம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே அதிகளவில் சேலம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 93 மாற்றுத்திறனாளிகளுக்கு 40 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
11 உழவர் சந்தைகள் மூலம் ஒரு கோடியே 97 இலட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.
புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 750 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் மேலாக, முத்தாய்ப்பாக உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறந்து விட இருக்கிறோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்