ஒடுக்கப்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “திமுக ஒடுக்கப்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் என்றைக்கும் அரணாக இருக்கும். ஆட்சி பொறுப்பிலிருக்கக்கூடிய காலகட்டங்களில் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த இஸ்லாமிய பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாம் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 1969-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில் தான் மிலாது நபிக்கு முதல்முறையாக அரசு விடுமுறையை உருவாக்கி தந்தார். அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து மிலாது நபிக்கு விடுமுறை அளித்தார்.
உருது பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, உலமாக்களுக்கு ஓய்வூதியத்தொகை ரூ.2000-லிருந்து ரூ.2400-ஆக உயர்த்தியது, வக்ஃபு வாரிய சொத்துக்களை பராமரிப்பதற்காக ரூ.40 லட்சம் மானியம் வழங்கியது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் செல்ல அனுமதித்தது, உருது அகாடமி துவங்கியது, 2007-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது என திமுக ஆட்சியில் சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினர் நலன் காப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். இஸ்லாம் சகோதர, சகோதரிகளுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
செல்வம்
ட்ரெண்டாகும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்ட்!
ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் வழக்கை நிராகரித்த நீதிபதி!