திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஆயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் அடிமைப்பட்டு கிடந்த திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரை ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமூகமாக மாற்றி காட்டியவர் தந்தை பெரியார். சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளை பெற வேண்டும் என்று ஏழை எளிய மக்களுக்காக ஆட்சி அமைத்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தன்னுடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மூலம் ஆட்சி என்பதற்கான இலக்கணத்தை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் கலைஞர். இவர்கள் மூன்று பேரோடு அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என் மனதில் தோன்றினார்கள்.
முதல்வர் பொறுப்பை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்ற தைரியம் எனக்குள் வந்துவிட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வில்லாமல் என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டின் மக்கள் முகங்களில் பார்க்கிறேன். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகிழ்ச்சியும் புன்னகையுமே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். மக்களை சாதியால் மதத்தால் இனத்தால் அதிகாரத்தால் ஆணவத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது. திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளோடு நான் செயல்படுகிறேன். இந்த ஆட்சியினுடைய முகம் சனாதனம் அல்ல சமூக நீதி. அதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
தோஹா டைமண்ட் லீக்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
“சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா?”: சேகர் பாபு கேள்வி!