கருத்து முரண்பாடுகளால் திமுக கூட்டணி கட்சிகளுடனான நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 15) தெரிவித்துள்ளார். Mk Stalin says dmk alliance
உங்களில் ஒருவன் தொடரில் பொதுமக்களின் கேள்விகளுக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அளித்துள்ள பதில்…
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான்.
2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.

வெளி மாவட்டப் பயணங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
அரசு நிகழ்ச்சிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் மட்டும் கலந்து கொண்டோம் என்று இந்தப் பயணங்கள் இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் சந்தித்துப் பேசுகிறேன். என்னைச் சந்திக்கும்போது, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன்.
ஒவ்வொருவரும் என்னிடம் உரிமையோடு பேசுகிறார்கள். “மக்களுக்கான அரசாக உங்கள் அரசு இருக்கிறது” என்று சொல்கிறார்கள். நம்முடைய குறைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையுடன் மனுக்களைக் கொடுக்கிறார்கள்.
கூடுமானவரைக்கும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண்கிறோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஏன் அதைசெய்ய முடியவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் தேவைகளையும் செய்து கொடுக்கிறோம்.
மொத்தத்தில், இந்த வெளி மாவட்டப் பயணங்கள் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், புதிய எனர்ஜியைத் தருகிறது.
இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். Mk Stalin says dmk alliance