சிஏஜி அறிக்கை மூலம் பாஜகவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் விக்னேஷ், செல்வபிரியா திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் எப்போதும் நட்பு உண்டு. இது தேர்தலுக்கான நட்பு அல்ல, கொள்கைக்கான நட்பு.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி தொடரும். பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற தான் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது.
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கு நான் செல்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தை எப்போதும் திருவாரூரில் தான் துவங்குவேன்.
இப்போதும் அதே உணர்வோடு தான் இந்த மேடையில் உங்கள் முன்பாக நின்றுகொண்டிருக்கிறேன். பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மதத்தை வைத்து மதக்கலவரங்களை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தும் வேளையில் பாஜக ஈடுபட்டுள்ளது. இந்தியா கூட்டணி அமைவதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் காரணமாக இருக்கிறதே என்கிற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துள்ளது.
இதனால் சுதந்திர தினமோ, வெளிநாடுகளுக்கு சென்றாலோ திமுக கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
ஊழல் பற்றி பேச பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? சிஏஜி அறிக்கை பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்கிறது. சிஏஜி அறிக்கையின் மூலம் ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன்படி பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தி மேம்பாட்டு திட்டம்,
கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், ஹெச்ஏஎல் விமான வடிவமைப்பு திட்டம் போன்றவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
மத்திய விஜிலன்ஸ் கமிஷன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீது தான் அதிக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பாஜக ஊழலை ஒழிக்க போவதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதை தாங்க முடியாமல் பழிவாங்க சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் திமுக பயப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜவான் படத்தின் ‘ராமய்யா வஸ்தாவையா’ டீசர் ரிலீஸ்!
சென்னை அண்ணா சாலையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!